மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜ.க. மோதல்; பலர் காயம் - வாகனங்கள் சேதம்


மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜ.க. மோதல்; பலர் காயம் - வாகனங்கள் சேதம்
x
தினத்தந்தி 24 Jan 2021 3:21 AM GMT (Updated: 24 Jan 2021 3:21 AM GMT)

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜ.கவினரிடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர்.

ஹவுரா, 

மேற்கு வங்காள மாநிலம், ஹவுரா மாவட்ட பால்லி தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைசாகி டால்மியா, நேற்று முன்தினம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பால்லியில் நேற்று திரிணாமுல்-பா.ஜ.க. தொண்டர்கள் தெருச்சண்டையில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் காயம் அடைந்தனர். சில மோட்டார் சைக்கிள்களும், ஒரு போலீஸ் வாகனமும் சேதப்படுத்தப்பட்டன.

சில கடைகளில் பா.ஜ.க. வினர் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களைத் தாக்கியதாகவும் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.

அதை மறுத்த பா.ஜ.க. தொண்டர்கள், தங்களை திரிணாமுல் கட்சியினர் இரும்புக்கம்பிகள், கம்புகளால் தாக்கியதாகவும், தங்கள் தொண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் புகார் தெரிவித்தனர். ஆனால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதா என போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை திரிணாமுல் தொண்டர்கள் வலுக்கட்டயமாக அகற்ற முற்பட்டபோது பிரச்சினை ஏற்பட்டதாக சிலர் தெரிவித்தனர்.

வன்முறையை நிகழ்ந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story