இந்தியாவில் விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட நடவடிக்கை ?


இந்தியாவில் விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட நடவடிக்கை ?
x
தினத்தந்தி 24 Jan 2021 7:43 PM GMT (Updated: 24 Jan 2021 7:43 PM GMT)

இந்தியாவில் ஆறே நாளில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்து விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த 3-ந் தேதி ஒரே நாளில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16-ந்தேதி தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி இதுவரை 15 லட்சத்து 82 ஆயிரத்து 201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 609 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 27 ஆயிரத்து 920 தடுப்பூசி அமர்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்தியாவில் ஆறே நாளில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை அளவு ஆகும். இங்கிலாந்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு எடுத்துக்கொண்ட நாட்கள் 18 ஆகும். அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட நாட்கள் 10 ஆகும். அந்த வகையில் இந்தியா அதிகம் பேருக்கு தடுப்பூசி போடுவதில் உலகுக்கே முன்னோடியாக உள்ளது.

அடுத்த கட்டமாக சிவில் விமான போக்குவரத்து துறையில் இருப்போருக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மாதம் 28-ந் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முன்னுரிமை பட்டியலில், முன் கள பணியாளர்கள் என பாதுகாப்பு படையினர், சிறை பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதில் விமான பணியாளர்கள் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக கடந்த 20-ந் தேதி சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷணுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

விமான சிப்பந்திகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தரை பணியாளர்கள், முன்வரிசை பணியாளர்கள் போன்றோர் தங்களது கடமைகளை மிகவும் விடா முயற்சியுடன் செய்து, விமான போக்குவரத்தை பாதுகாப்பான போக்குவரத்து முறையாக மாற்றுகின்றனர் என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். 

விமான நிறுவனங்கள், விமானநிலையங்களின் முன்னணி ஊழியர்கள் தடுப்பூசிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு, டிசம்பர் மாதம் 28-ந் தேதி சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முன்கள பணியாளர்கள் பட்டியலில் விமான நிறுவனங்கள், விமான நிலையங்களின் பணியாளர்களையும் சேர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்த பணியாளர்களை கொண்டு வருவதற்கு, கணக்கிடும் பணியை சிவில் விமான போக்குவரத்து துறை ஒருங்கிணைக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

எனவே இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு விமான போக்குவரத்து துறையினரும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கும் முன்னுரிமைபடி தடுப்பூசி போடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Next Story