டெல்லியில் குவியும் விவசாயிகள்; பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு + "||" + Farmers Can Enter Delhi, But Can't Disturb Republic Day Parade: Police
டெல்லியில் குவியும் விவசாயிகள்; பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) தலைநகர் டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் அணிவகுப்பு (பேரணி) நடத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 2 மாதங்களை நெருங்கி விட்டது.இந்த போராட்டத்துக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய அரசும், விவசாய அமைப்புகளும் 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும், போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை
எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) தலைநகர் டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் அணிவகுப்பு (பேரணி) நடத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிப்பது அரசு மற்றும் போலீசாரை சார்ந்தது எனக்கூறி விட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகளுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதில் பேரணி நடத்துவதில் உறுதியாக இருந்த விவசாயிகள், டெல்லியில் அரசின் குடியரசு தினவிழா கொண்டாட்டம் மற்றும் ராணுவ அணிவகுப்பு அனைத்தும் முடிந்த பின்னர்தான் இந்த பேரணியை நடத்துவோம் எனக்கூறினர்.
இதைத்தொடர்ந்து பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்து விட்டனர். மேலும் விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு வசதியாக, சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் அகற்றப்படும் எனவும் அவர்கள் உறுதி கூறியுள்ளனர். அதன்படி இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை விவசாய அமைப்புகள் முழுவீச்சில் செய்து வருகின்றன. இந்த பேரணி திட்டம் குறித்து விவசாய தலைவர்கள் சிலர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
* கடந்த நவம்பர் 28-ந்தேதி முதல் விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்கு, திக்ரி, காஜிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 எல்லைப்பகுதிகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கும். ராஜபாதையில் அரசின் ராணுவ அணிவகுப்பு முடிந்தபின்னர் தொடங்கும் இந்த பேரணி (அணிவகுப்பு) மாலை 6 மணி வரை 100 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு நடக்கும்.
* அணிவகுப்பில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் டிராக்டர்-டிராலிகள் இடம்பெறும். இதில் 30 சதவீத டிராக்டர்கள், பல்வேறு தலைப்பின் அடிப்படையில் அலங்கார ஊர்திகளாக வடிவமைக்கப்படும்.
* இந்தியாவில் விவசாய இயக்கங்களின் வரலாறு, பெண் விவசாயிகளின் பங்களிப்பு, பல்வேறு மாநிலங்கள் பின்பற்றும் விவசாய நடைமுறைகள், மலைப்பிரதேசங்களில் காய்கறி, பழங்கள் பயிரிடுதல், நவீன பண்ணை தொழில்நுட்பம், பால்வளம் உள்ளிட்டவை தொடர்பாக அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்படும்.
* மராட்டியத்தின் விதர்பா பிராந்தியத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குழந்தைகள் சார்பில் அலங்கார ஊர்தி ஒன்று வடிவமைக்கப்படும். விவசாயிகளின் துயரங்களை அந்த ஊர்தி எதிரொலிக்கும்.
* ஒவ்வொரு டிராக்டர் களிலும் தேசியக்கொடி கட்டப்பட்டு இருக்கும். நாட்டுப்புற பாடல்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
* பேரணியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக ஒவ்வொரு போராட்டக்களத்திலும் சிறப்பு அறை ஒன்று உருவாக்கப்படும். இதில் டாக்டர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், சமூக வலைத்தள மேலாளர்கள் என 40 பேர் இருப்பார்கள்.
* பேரணியில் பங்கேற்பவர்களுக்கு ஏதாவது மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதை நிறைவேற்றுவதற்காக 40 ஆம்புலன்சுகள், பேரணியில் ஈடுபடுத்தப்படும்.
* பேரணி அமைதியாக நடப்பதை உறுதி செய்ய 2,500 தன்னார்வலர்கள் பேரணியை ஒழுங்குபடுத்துவர். போராட்டத்தில் பங்கெடுத்துள்ள முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்பு குழு ஒன்றும் பேரணியை கண்காணிக்கும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
பேரணியில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் டெல்லியில் அணி, அணியாக குவிந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் பரபரப்பு நிலவுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே பேரணியில் பங்கேற்க வரும் வாகனங்களுக்கு அரியானா, உத்தரபிரதேசங்களில் உள்ள பா.ஜனதா அரசுகள் பெட்ரோல் தர மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.