புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்


புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்
x
தினத்தந்தி 25 Jan 2021 7:17 AM GMT (Updated: 25 Jan 2021 7:17 AM GMT)

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி காங்கிரசிலிருந்து பிரிந்து என்.ஆா்.காங்கிரசை உருவாக்கிய என்.ரங்கசாமி கடந்த 2011-இல் ஆட்சியை கைப்பற்றினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமியை தோற்கடிக்க அவரது நெருங்கிய உறவினரான ஆ.நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. ஆனால், தேர்தலுக்குப் பின்னா் ஆளுநா் கிரண் பேடியை சமாளிக்க வேண்டுமென்ற அடிப்படையில் மூத்த அரசியல்வாதியான வே.நாராயணசாமிக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது.

இதனால் அதிருப்தியடைந்த நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தி, அமைச்சரவையில் 2-ஆவது இடம் வழங்கியது. மேலும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவராகவும் தொடா்ந்து பதவி வகித்து வந்தார். பொதுப் பணி, கலால் துறை உள்பட 19 துறைகள் நமச்சிவாயத்திடம் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் பதவி பறிக்கப்பட்டு, காரைக்காலைச் சோந்த முன்னாள் அமைச்சா் ஏ.வி.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. இதனால் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து அமைச்சா் நமச்சிவாயம் தனது ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நமச்சிவாயம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story