பட்ஜெட் தினத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி; விவசாயிகள் அறிவிப்பு


பட்ஜெட் தினத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி; விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2021 1:51 PM GMT (Updated: 25 Jan 2021 1:51 PM GMT)

பட்ஜெட் தினத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில், கடந்த 21ந்தேதி நடந்த 10-வது சுற்று பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

ஆனால், அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே கடந்த 22ந்தேதி நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன.  இதற்காக விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், டெல்லி போலீசின் உளவு பிரிவு அமைப்பின் சிறப்பு அதிகாரி தேவேந்திர பதக் நேற்று மாலை கூறும்பொழுது, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குவது என நாங்கள் இறுதி முடிவு எடுத்துள்ளோம் என கூறினார்.

டிராக்டர் பேரணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய சம்பவங்கள் நடைபெற சாத்தியம் உள்ளது என கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.  டிராக்டர் பேரணியை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து பகுதிகள் சில இன்று மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சிங்கு எல்லை பகுதியில், கிரந்திகாரி வேளாண் அமைப்பின் தலைவர் தர்சன் பால் செய்தியாளர்களிடம் இன்று நடத்திய சந்திப்பில் பேசும்பொழுது, மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜனவரி 26, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்கிறோம்.

இதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் நோக்கி வருகிற 1ந்தேதி, பட்ஜெட் தினத்தில் நாங்கள் பேரணியாக நடந்து செல்ல இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Next Story