நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் அறிவிப்பு; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சாலமன் பாப்பையா தேர்வு


நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் அறிவிப்பு; எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சாலமன் பாப்பையா தேர்வு
x
தினத்தந்தி 25 Jan 2021 4:33 PM GMT (Updated: 25 Jan 2021 4:33 PM GMT)

நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகளில் தமிழகத்திற்கான பத்ம விபூஷண் விருதுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுக்கு சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

நாட்டின் மிக உயரிய பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.  இவற்றில், நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இதன்படி, பொது விவகார துறைக்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கலை பிரிவில் தமிழகத்தில் இருந்து பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (மறைவுக்கு பின்), மருத்துவ பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நரீந்தர் சிங் கப்பானி (மறைவுக்கு பின்) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இதேபோன்று பிற பிரிவுகளில் ஆன்மீகத்திற்காக டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுதீன் கான், தொல்லியல் துறைக்காக டெல்லியை சேர்ந்த பி.பி. லால் மற்றும் கலை பிரிவில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் சாஹூ ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நாட்டின் மிக உயரிய பத்ம பூஷண் விருதுக்கு பல்வேறு துறைகளில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  இதன்படி, கலை துறையில் கேரளாவை சேர்ந்த கிருஷ்ணன் நாயர் சாந்த குமாரி சித்ரா, பொது விவகார துறையில் அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் (மறைவுக்கு பின்), இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர் கம்பாரா, பொது விவகார துறையில், முன்னாள் மக்களவை சபாநாயகரான மத்திய பிரதேசத்தின் சுமித்ரா மகாஜன், குடிமக்கள் சேவையில் பிரதமருக்கான முன்னாள் முதன்மை செயலாளரான உத்தர பிரதேசத்தின் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று, பொது விவகார துறையில் முன்னாள் மத்திய மந்திரியான பீகாரை சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் (மறைவுக்கு பின்), பொது விவகார துறையில் குஜராத்தின் கேசுபாய் பட்டேல் (மறைவுக்கு பின்), பிற துறையில் ஆன்மீகத்தில் மத தலைவரான உத்தர பிரதேசத்தின் கால்பே சாதிக் (மறைவுக்கு பின்), பொது விவகார துறையில் அரியானாவின் தர்லோசன் சிங் ஆகியோர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இதேபோன்று பத்மஸ்ரீ விருதுக்கு இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் தமிழகத்தின் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்பட 102 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story