என்ன விலை கொடுத்தாவது, தேசத்தின் நலன் பாதுகாக்கப்படும்; ஜனாதிபதி சூளுரை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
x
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
தினத்தந்தி 26 Jan 2021 12:08 AM GMT (Updated: 2021-01-26T05:38:58+05:30)

என்ன விலை கொடுத்தாவது தேசத்தின் நலன் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரையின்போது சூளுரைத்தார்.

குடியரசு தின உரை
நாடு இன்று தனது 72-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இதையொட்டி, முந்தைய நாள் மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மரபு இருந்து வருகிறது. அந்த வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு நேற்று தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய, மிகவும் துடிப்பான ஜனநாயகத்தின் 72-வது குடியரசு தினத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கடினமாக உழைக்கிற நமது விவசாயிகள் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறார்கள். நமது ஆயுதப்படைகளின் துணிச்சலான வீரர்கள் கடுமையான நிலைமைகளுக்கு மத்தியில் நமது தேசிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள்.

ஒவ்வொருவரும் பெருமிதம்
சியாச்சின் மற்றும் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் மைனஸ் 50 அல்லது 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு புறமும், 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஜெய்சல்மோரிலும் நிலத்திலும், வானத்திலும், பரந்த கடலோரப்பகுதிகளிலும் நமது வீரர்கள் கண்விழிப்புடன் இருக்கிறார்கள்.
நமது வீரர்களின் துணிச்சல், தேசபக்தி, தியாக உணர்வில் ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்கிறார்கள்.

விவசாயிகளின் நலனில் அர்ப்பணிப்பு
சீர்திருத்தத்தின் பாதை ஆரம்பத்தில் தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால், விவசாயிகளின் நலனில் நமது அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.

சகோதரத்துவத்தின் அரசியல் அமைப்பு மதிப்பு மக்களிடையே இல்லாமல், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக ஒரு சிறந்த பதிலளிப்பு சாத்தியம் இல்லாமல் போய் இருக்கும்.

உலகமெங்கும் உள்ள துன்பங்களை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளுக்கு மருந்து வினியோகம் செய்து இந்தியா உலகின் மருந்தகம் என அழைக்கப்படுவது பெருமிதம் அளிக்கிறது.

கடந்த ஆண்டு துன்பகரமான ஆண்டாக அமைந்து விட்டது. பல முனைகளில் இருந்தும் துன்பம் வந்தது. எல்லைகளில் நாம் விரிவாக்க முயற்சி நடவடிக்கையை எதிர்கொண்டோம். ஆனால் நமது வீரம் மிக்க வீரர்கள் அதை முறியடித்தனர். இந்த நோக்கத்தை அடைவதில் 20 வீரர்கள் தங்கள் இன்னுயிரைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

அந்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு நமது நாடு நன்றியுடன் இருக்கும்.

தேசத்தின் நலன்பாதுகாக்கப்படும்
இந்தியா அமைதியைத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் முறியடிப்பதற்கு, நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் போதுமான அளவில் நமது பாதுகாப்பு படைகள் அணி திரட்டப்பட்டிருக்கின்றன.

என்ன விலை கொடுத்தேனும், நமது தேசத்தின் நலன் பாதுகாக்கப்படும். இந்தியா முன்னேற்றப்பாதையில் நடை போடுகிறது. உலகில் தனக்கான இடத்தை பிடித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story