குடியரசு தினம்: வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண திரண்ட பொதுமக்கள் + "||" + Republic Day: Crowds gather to watch the unfurling of the national flag at the Wagah border
குடியரசு தினம்: வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண திரண்ட பொதுமக்கள்
நாட்டின் 72வது குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு வாகா எல்லையில் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வை காண பொதுமக்கள் திரளாக கூடினர்.
புதுடெல்லி,
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி அந்தந்த நாடுகளின் எல்லை பகுதிகளான அட்டாரி-வாகாவில் தினசரி நடக்கும். அப்போது நடைபெறும் இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடுவார்கள்.
நாட்டின் 72வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, போர் நினைவுச்சின்னத்தில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதைக்கு வருகை தந்தார்.
அவரை தொடர்ந்து ராஜபாதைக்கு வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். இதனையடுத்து மூவர்ண கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தார். பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். வங்கதேச முப்படைகளில் இருந்து 122 வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில், குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. இதனையடுத்து, கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிலையில் வழக்கம்போல் கொடியிறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கி நடந்து வருகிறது. கொடி இறக்கம் என்பது சூரியன் மறைவதற்கு முன்னர் நடத்தப்படும். கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உள்ளனர். ராணுவ வீரர்கள் வரிசையுடன் நடந்து சென்று அணிவகுத்தனர். எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது நாட்டு கொடிகளை இறக்கும் நிகழ்ச்சியை காண பொதுமக்கள் திரளானோர் கூடியிருந்தனர்.
கொரோனா தொற்றை முன்னிட்டு பார்வையாளர்கள் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில், ராணுவ வீரர்களின் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்கள் கூடியிருந்து கண்டுகளித்தனர்.