விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு


விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக  22 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 27 Jan 2021 7:17 PM GMT (Updated: 27 Jan 2021 7:17 PM GMT)

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராடி வந்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடியரசு தினமான நேற்று முன்தினம் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதற்காக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய எல்லைகளில் சுமார் 1 லட்சம் டிராக்டர்களுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்.

பின்னர் போலீசார் அனுமதி அளித்த நேரத்துக்கு முன்னரே, அனுமதிக்காத சாலைகளின் வழியாக பேரணியை நடத்தினர். இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரின் எதிர்ப்பை மீறியும், காங்கிரீட், இரும்பு தடுப்பு வேலிகளை டிராக்டர்கள் மூலம் உடைத்துக்கொண்டும் அவர்கள் முன்னேறினர்.

இது ஒருபுறம் இருக்க டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் சட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். அதன்படி 22 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக கண்காணிப்பு கேமரா மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டெல்லி போலீசார் கூறியதாவது: சிங்கு எல்லையில் போராடிய விவசாயிகள் காலை 36.30 மணிக்கே தடுப்புகளை உடைத்தனர். அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல அவர்கள் விரும்பவில்லை. டிக்ரி காசியாபூர் எல்லைகளிலும் இதே நிலை நீடித்தது. புட்டா சிங் உள்பட அவரது அணியினர் வன்முறையில் ஈடுபட்டனர். ராகேஷ் டிகாய்த் உடன் இருந்த விவசாயிகளும் காசியாபூரில் வன்முறையில் ஈடுபட்டதோடு செங்கோட்டை பகுதிக்குள்ளும் நுழைந்தனர்” என்றார். 

Next Story