போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் விவகாரம்: காணொலி விசாரணையில் தமிழக முதன்மை செயலாளர் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் விவகாரம்: காணொலி விசாரணையில் தமிழக முதன்மை செயலாளர் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Jan 2021 9:24 PM GMT (Updated: 27 Jan 2021 9:24 PM GMT)

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் காணொலி விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழக அரசு முதன்மை செயலாளருக்கு (உள்துறை) சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரிக்க தொடங்கியது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான, போதுமான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும். இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 27-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகம், ஆந்திரா, நாகாலாந்து, மிசோரம், ஒடிசா, உத்தரகாண்ட், டெல்லி, லட்சத்தீவுகள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் சித்தார்த் தவே தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் (உள்துறை) மார்ச் 2-ந் தேதி நடைபெறும் காணொலி மூலம் நடக்கும் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய புலனாய்வு அமைப்பு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பதில் அளிக்க 3 வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Next Story