சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ந்தேதி வெளியாகிறது


சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ந்தேதி வெளியாகிறது
x
தினத்தந்தி 28 Jan 2021 7:18 PM GMT (Updated: 28 Jan 2021 7:18 PM GMT)

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ந்தேதி வெளியாகிறது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4-ந்தேதி முதல் ஜூன் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இவர்களுக்கான செய்முறைத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. 

இதற்கிடையில் கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 30 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஒவ்வொரு வினாத்தாளிலும் 33 சதவீதம் உள் விருப்பமாக (இன்டெர்னல் சாய்ஸ்) வினாக்கள் கேட்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

இந்த நிலையில் எந்தெந்த நாட்களில்?, என்னென்ன தேர்வு? என்பது அடங்கிய பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? என்று மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்து வந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால், அது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். 

அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த விரிவான அட்டவணை அடுத்தமாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி அறிவிக்கப்படும். கொரோனா தொற்றுநோய் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் மாணவர்கள் தங்கள் படிப்பில் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க ஆசிரியர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story