கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு 10 லட்சம் தடுப்பூசி; இந்தியா அனுப்புகிறது


கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு 10 லட்சம் தடுப்பூசி; இந்தியா அனுப்புகிறது
x
தினத்தந்தி 29 Jan 2021 12:15 AM GMT (Updated: 29 Jan 2021 12:15 AM GMT)

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 3-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தடுப்பூசிகளை போடும் மிகப்பெரிய பணி இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் உலகின் பல நாடுகள், இந்தியாவை தடுப்பூசிகளுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா, கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்கிறது. இதை தென் ஆப்பிரிக்க சுகாதார மந்திரி டாக்டர் ஸ்வேலி மகைஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஜோகன்னஸ்பர்க் நகரில் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த தடுப்பூசி பிப்ரவரி 1-ந் தேதி நமது நாட்டுக்கு வந்து சேரும். துபாய் வழியாக இந்த 10 லட்சம் தடுப்பூசி டோஸ், தென் ஆப்பிரிக்கா வந்து சேர்ந்ததும், அவை 14 நாட்களுக்கு சில செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும். கொரோனா தொற்று பதிவான முதல் ஒரு வருடத்துக்குள் 10 லட்சம் தடுப்பூசி கிடைத்து பெறுவதே மிகப்பெரிய சாதனை” என பெருமித்துடன் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். தென் ஆப்பிரிக்காவில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்த நாட்டின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

காப்பீடு செய்தவர்கள் தடுப்பூசிகளுக்கான பணத்தை தங்கள் மருத்துவ உதவித்திட்டங்கள் மூலம் செலுத்துவார்கள் என்றும் கூறினர். அதே நேரத்தில் காப்பீடு செய்யாத 3.5 லட்சம் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி செலவை அந்த நாட்டு அரசு ஏற்கும். இதேபோன்று தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு பணியிடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுவதை விரும்பும். அதற்கான செலவை அவை ஏற்கும்.

குளிர்சங்கிலி வசதி கொண்டுள்ள மருந்தகங்கள், தடுப்பூசிகள் வாங்க தென் ஆப்பிரிக்காவில் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story