ராஜஸ்தானில் பெட்ரோல், டீசலுக்கு 2% வாட் வரி குறைப்பு; மத்திய அரசுக்கும் வலியுறுத்தல்


ராஜஸ்தானில் பெட்ரோல், டீசலுக்கு 2% வாட் வரி குறைப்பு; மத்திய அரசுக்கும் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jan 2021 6:49 AM GMT (Updated: 29 Jan 2021 6:49 AM GMT)

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 2% வாட் வரியை குறைத்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது.  நாட்டின் பெருநகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது.  ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.93.94க்கும், டீசல் ரூ.86.02க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.  கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தபோதிலும், வாகன எரிபொருள் விலை நாட்டில் குறையாத நிலை காணப்படுகிறது.  இதற்கு அவற்றின் மீது விதிக்கப்படும் அதிக வரியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரியில் (மதிப்பு கூட்டு வரி) தலா 2% குறைத்துள்ளது.  மறைமுக வரிகளில் ஒன்றான இந்த வாட் வரியானது, பொருளின் உற்பத்தியில் இருந்து விற்பனை வரையிலான வினியோக தொடரின் ஒவ்வொரு நிலையிலும் அதன் மதிப்புக்கேற்ப மாற்றியமைக்கப்படுகிறது.

ராஜஸ்தானில் குறைக்கப்பட்ட இந்த வரியின் அடிப்படையில், பெட்ரோல் மீது 36% வாட் வரியும் மற்றும் டீசல் மீது 26% வாட் வரியும் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.  இதனை பின்பற்றி மத்திய அரசும் வாட் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அரசை கெலாட் வலியுறுத்தி உள்ளார்.  இதனால், மக்களின் மீதுள்ள நிதி சுமையும் குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story