சிங்கு எல்லையில் உள்ளூர்வாசிகளுக்கும் - விவசாயிகளுக்கும் இடையே மோதல் ;கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 29 Jan 2021 9:52 AM GMT (Updated: 2021-01-29T15:22:23+05:30)

விவசாயிகள் போராடி வரும் டெல்லி -அரியானா சிங்கு எல்லையில் உள்ளூர்வாசிகளுக்கும் - விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராடி வருகின்றனர்.

இதில் ஈடுபட்டிருந்த சுமார் 41 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியது. ஆனால் அவை பலனளிக்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் விவசாயிகள்  குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் டிராக்டர்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக டெல்லிக்குள் நுழைந்தனர்.

போலீசார் அனுமதிக்காத நேரத்தில், அனுமதிக்காத தடத்தில் பேரணி நடந்ததால், போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்தது. இதில் பல வாகனங்கள், தடுப்பு வேலிகள் என ஏராளமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மற்றும் விவசாயிகள் தரப்பில் பலர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இதற்கு மத்தியிலும் விவசாயிகள் செங்கோட்டைக்குள் புகுந்து அங்கு மத கொடி ஒன்றை ஏற்றினர்.  இதன்பின்னர் போராட்டக்காரர்கள் மீண்டும் தங்களது பழைய போராட்ட களத்திற்கு திரும்பினர்.

இந்நிலையில், திக்ரி எல்லையில் விவசாயிகள்  இன்றும் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  வன்முறையை தடுக்க மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசாரும் அந்த பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில், டெல்லி -அரியானா சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள் காலி செய்து விட்டு அங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும் என கோரி உள்ளூர்வாசிகள் ஏற்கனவே கெடு விதித்து இருந்தனர். 

இன்று  சிங்கு எல்லையில் போராடும்  விவசாயிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டது. டெல்லி  போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை  வீசினர்  லேசான தடியடி நடத்தினர்.

விவசாயிகள் போராடும்  இடத்திற்கு நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் வந்தனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக அந்த இடத்தில்  போராட்டம்  நடத்தி வருவதாகவும் அந்த இடத்தை காலி செய்யுமாறு அவர்கள் கோரினர் . இதனால் உள்ளூர்வாசிகளுக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, உள்ளூர்வாசிகள் விவசாயிகளின் கூடாரங்களை பிடிங்கி எறிந்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும்  கல் வீசி தாக்கி கொண்டனர்.

டெல்லி போலீசாரும் சிங்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரும்  இந்த கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். லேசான தடியடி நடத்தினர்.

இதுபோல் திக்ரி எல்லையிலும் ஒரு குழுவினர் போராட்டக்காரர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story