டெல்லி விவசாயிகள் போராட்டக்களத்தில் பயங்கர மோதல்; போலீசார் தடியடி; கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு


விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட உள்ளூர் பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்த காட்சி
x
விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட உள்ளூர் பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்த காட்சி
தினத்தந்தி 29 Jan 2021 6:31 PM GMT (Updated: 2021-01-30T00:01:33+05:30)

டெல்லி சிங்கு எல்லையில் மர்ம கும்பல் புகுந்து விவசாயிகளை மிரட்டியதால் பயங்கர மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.

தொடர் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ந்தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது.

அதற்கு மத்தியிலும் விவசாயிகளின் ஒரு பகுதியினர் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் தங்களின் கொடியை ஏற்றினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் பின்னர் தங்களின் பழைய போராட்டக்களங்களுக்கு திரும்பினர். அதன்படி சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் தங்கள் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

விவசாயிகளை மிரட்டினர்
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் முக்கிய இடமாக கருதப்படும் சிங்கு எல்லையில் நேற்று திடீரென ஒரு மர்ம கும்பல் புகுந்தது. கம்பு, தடிகளோடு வந்த அவர்கள், விவசாயிகளை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டினர்.

தங்களை உள்ளூர்வாசிகள் எனக்கூறிக்கொண்ட அவர்கள், டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் தேசியக்கொடியை அவமதித்ததால், இனியும் அங்கே போராட அனுமதிக்கமாட்டோம் எனக்கூறினர். மேலும் விவசாயிகளுக்கு எதிராக அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

பயங்கர மோதல் வெடித்தது
ஒரு கட்டத்தில் அவர்கள் விவசாயிகள் மீது கற்களை வீசியும், கம்புகளைக்கொண்டு தாக்கியும் வன்முறையில் இறங்கினர். இதனால் விவசாயிகளும் திருப்பி தாக்கினர். இதனால் போராட்டக்களம், போர்க்களமாக மாறியது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இன்ஸ்பெக்டர் காயம்
இதில் வன்முறையில் ஈடுபட்ட ஒருவர் வாளால் வெட்டியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். மேலும் இந்த வன்முறையில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.

உடனே போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். பின்னர் போராட்டக்களத்தை சுற்றி தடுப்புவேலிகள், காங்கீரிட் கட்டைகள், கன்டெய்னர்களை கொண்டு அரண் அமைத்த போலீசார் அதை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தனர்.

இதனால் சிங்கு எல்லை போராட்டக்களம் ஒரு கோட்டை போல மாறியது. அங்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அணிவகுப்பு ஊர்வலம் நடத்திய போலீசார், ஊடகத்தினர் உள்பட யாரையும் போராட்டக்களத்துக்குள் அனுமதிக்கவில்லை.

விவசாயிகள் குற்றச்சாட்டு
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்வாசிகள் என்ற போர்வையில் வந்த குண்டர்கள் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘அவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல, மாறாக கூலிக்கு அனுப்பப்பட்ட குண்டர்கள். அவர்கள் எங்கள் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். மேலும் எங்களது டிராக்டர்களுக்கு தீ வைக்கவும் முயன்றனர். நாங்கள் தடுத்து விட்டோம். இந்த அச்சுறுத்தலுக்கோ, போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளுக்கோ, ஆயுதங்களுக்கோ நாங்கள் அஞ்சமாட்டோம். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கிருந்து நகரமாட்டோம்’ என்று தெரிவித்தனர்.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து சிங்கு எல்லையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது. அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story