இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு; மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு


இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு; மும்பையில்  பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2021 1:52 AM GMT (Updated: 30 Jan 2021 1:52 AM GMT)

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டு வெடித்ததை அடுத்து முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்பப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே உள்ள ஜிண்டால் வீட்டின் அருகில் நேற்று மாலை குறைந்த சக்திகொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் குண்டு வெடித்த பகுதியில் இருந்த சில கார்களின் கண்ணாடி மட்டும் உடைந்ததாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஜித்பவார், மராட்டியத்தில் போலீசாரின் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர், "மாநிலத்தின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உள்துறை மந்திரி, போலீஸ் டி.ஜி.பி.யுடன் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மும்பை, புனேயில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

இதேபோல உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் டுவிட்டர் பதிவில், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மும்பை, புனே, நாக்பூர், நாசிக் மற்றும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும், என அதில் கூறியுள்ளார்.

Next Story