அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று புதுவையில் ஆட்சி அமைப்போம்; பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உறுதி


பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்
x
பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்
தினத்தந்தி 1 Feb 2021 12:05 AM IST (Updated: 1 Feb 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் 23 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. கட்சிகளில் முக்கிய பிரமுகர்கள் இணைப்பு, தலைவர்கள் முற்றுகை என களைகட்டி வருகிறது.

பா.ஜ.க. பொதுக்கூட்டம்
இந்த நிலையில் தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று புதுவை வந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காரில் வந்த ஜே.பி.நட்டா புதுவை கவர்னர் மாளிகை அருகே உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் புதுவை ரோடியர் மில் திடலில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக அவர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தபோது வழிநெடுகிலும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை, தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

புண்ணிய பூமி
புதுச்சேரி மாநிலம் ஒரு புண்ணிய பூமி. மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர் என பல்வேறு கோவில்கள் கொண்ட ஆன்மிக பூமி. இங்குதான் பாரதியார், மகான் அரவிந்தர் போன்ற தேசபக்தர்கள் வாழ்ந்தார்கள். இங்கு வந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். மத்திய அரசின் திட்டங்கள் தற்போது நாடு முழுவதும் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது.

30 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மட்டும் 92 ஆயிரம் பேர் இந்த கணக்கினை தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் 8 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் புதுவையை சேர்ந்த 13 ஆயிரத்து 500 பேர் பயன்பெற்றுள்ளனர்.

ஆயு‌‌ஷ்மான் பாரத்
மாநிலம் முழுவதும் 6 லட்சம் எல்.இ.டி. விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஜிப்மர் வளர்ச்சிக்கு என ஆண்டு தோறும் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆயு‌‌ஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் புதுவையில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் வந்துள்ளன. அதன் மூலம் 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கிளைக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் ஜிப்மரின் 2-வது விரிவாக்க திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. கொரோனா வைரசிலிருந்து 130 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதற்கான தடுப்பூசியும் கண்டு பிடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாது பிற நாடுகளுக்கும் மருந்துகளை வழங்கி உதவி வருகிறோம்.

அதிர்ச்சி செய்தி
புதுவையில் ரேஷன்கடைகளே இல்லை என்ற செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி வருகிறார். இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மத்திய அரசின் 25 ஆயிரம் மெட்ரிக் டன் இலவச அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி மாநில மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் செயல் படுத்தவில்லை.

அவர் மத்திய மந்திரியாக இருந்தபோது ஜார்கண்ட் மாநிலத்தின் கடன் ரூ.5 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். ஆனால் புதுவை மாநிலத்தின் கடனை தள்ளுபடி செய்யாமல் மக்களுக்கு துரோகம் செய்தார்.

23 இடங்களுக்கும் மேல்...
உங்களையெல்லாம் பார்க்கும்போது புதுவையில் தாமரை ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களது எழுச்சியை பார்க்கும்போது நாம் 23 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம். ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தலையும் நடத்துவோம். புதிய ரெயில் திட்டங்களையும் செயல்படுத்துவோம்.

தற்போது மூடிக்கிடக்கும் மில்களை திறந்து இயக்குவோம். அவற்றை நவீனப்படுத்துவோம். தரமான ரோடுகளை அமைத்து கொடுப்போம். புதுவையின் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட பாலங்கள் கட்டுவோம். காரைக்கால்-பேரளம் இடையே ரெயில்பாதை அமைப்போம். இப்போது சம்பளம் இல்லாமல் தவிக்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தை நிலுவையுடன் வழங்குவோம்.

ஊழலே இல்லாத ஆட்சி எப்படியிருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்கு காட்டுவோம். நீங்கள் பாரதீய ஜனதாவுக்கு 23 இடங்களுக்கும் மேல் வெற்றியை தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

பொதுக்கூட்டத்தில் புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, தங்க.விக்ரமன், பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, நிர்மல்குமார் சுரானா, புதுவை பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன் குமார், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் விக்டர் விஜயராஜ், பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் சிவக்குமார், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story