டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு பண உதவி செய்பவர்கள் யார்? அமலாக்கத்துறை விசாரணை


டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு பண உதவி செய்பவர்கள் யார்? அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 1 Feb 2021 2:09 AM IST (Updated: 1 Feb 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு பண உதவி எங்கிருந்து வருகிறது? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.

டிராக்டர் பேரணியில் வன்முறை
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை மேற்கொண்டு வரும் பஞ்சாப், அரியானா,உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 26-ந்தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியையும் நடத்தினர்.

இந்த பேரணி வன்முறையில் முடிந்ததால், போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்தினர். இதற்கிடையிலும் விவசாயிகளில் ஒரு பகுதியினர் டெல்லி செங்கோட்டையில் மத கொடி ஒன்றை ஏற்றினர்.

38 வழக்குகள்
இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 38 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வன்முறை தொடர்பாக 84 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், வழக்கில் சிக்கிய 44 பேருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளனர். இதில் விவசாய அமைப்பு தலைவர்கள் பலரும் அடங்குவர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பேரணியை தொடர்ந்து டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் டெல்லியில் பரபரப்பு நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தையொட்டி தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
இந்த நிலையில் மிகப்பெரிய எண்ணிக்கையில் விவசாயிகளை அழைத்து வருவது, தர்ணா நடத்துவது, அவர்களுக்கு உணவு அளிப்பது, போராட்டங்களை தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கி உள்ளது.

இந்த விசாரணையில், இந்த போராட்டத்துக்கு நிதி வசூல் செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை தனது கவனத்தை செலுத்தி இருக்கிறது. அத்துடன் டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இயங்கி வரும் ஹவாலா தரகர்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், டெல்லி போலீசாரின் எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள நபர்கள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுவார்கள் என அவர்கள் கூறினர். இந்த விசாரணையின் முடிவில் போலீஸ் எப்.ஐ.ஆரைப்போல, குற்றவாளிகள் மீது அமலாக்கத்துறை வழக்கு தகவல் அறிக்கை ஒன்றும் பதிவு செய்யப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

முன்னதாக இந்த போராட்டத்துக்கு கிடைத்து வரும் வெளிநாட்டு நிதியுதவி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் கைது
இது ஒருபுறம் இருக்க டெல்லி சிங்கு எல்லையில் போலீசாரிடம் அத்தமீறியதாக பத்திரிகையாளர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
குறிப்பாக சிங்கு போராட்டக்களத்தை தடுப்பு வேலிகள் போட்டு போலீசார் பாதுகாத்து வரும் நிலையில், அந்த வேலிகளை அகற்றியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து குவியும் விவசாயிகள்
இதற்கிடையே பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத்தின் கண்ணீர் வேண்டுகோளை தொடர்ந்து, டெல்லி காஜிப்பூர் எல்லையில் விவசாயிகள் அலையலையாக குவிந்து வருகின்றனர். உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் வரும் அவர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு-பகலாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இரவில் நாட்டுப்புறப்பாடல்களுக்கு நடனம் ஆடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வரும் விவசாயிகள், இதன் மூலம் குளிரையும், தூக்கத்தையும் மறந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

காஜிப்பூர் எல்லையில் தொடர்ந்து விவசாயிகளின் வரத்து இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ட்ரோன் மூலம் கூட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எனினும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story