மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை
மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 2 நாள் முன்கூட்டியே முடியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மக்களவையில் இந்த நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது.
இன்று, அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
ஆலோசனை
இந்த சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து அதன் தலைவரும், துணை ஜனாதிபதியுமான எம்.வெங்கையா நாயுடு அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், வீட்டுவசதி மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், அவை முன்னவர் தவர்சந்த் கெலாட், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவேகவுடா, பா.ஜ.க. மூத்த தலைவர் பூபிந்தர் யாதவ், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ், தி.மு.க.வின் திருச்சி சிவா,
அ.தி.மு.க.வின் நவனீதகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வெங்கையா நாயுடு வேண்டுகோள்
இந்த கூட்டத்தில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, பட்ஜெட் அமர்வின்போது சபையின் சுமூகமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டை அனைவரும் உறுதிசெய்ய வேண்டிக்கொண்டார்.
மசோதாக்களை பரிசீலிப்பதற்கும், விவாதங்களுக்கு பதில் அளிப்பதற்கும் சுருக்கமாக பேசும் கலையை மந்திரிகள் கற்றுக்கொள்ள வேண்டும், இதனால் உறுப்பினர்கள் பேச அதிக நேரம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக்கட்சி தலைவர்களும், சபையில் நடைபெறும் விவாதங்களில் முழு பங்கேற்பு இருக்கும் என உறுதி செய்தனர்.
முன்கூட்டியே முடியும்
இந்த கூட்டத்தில் மாநிலங்களவை கூட்டத்தை பிப்ரவரி 15-ந் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 13-ந் தேதி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.எனவே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, பிப்ரவரி 15-ந்தேதிக்கு பதிலாக 2 நாள் முன்கூட்டியே (பிப்ரவரி 13-ந்தேதி) முடியும் என தகவல்கள் கூறுகின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு, மார்ச் 8-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி முடியும்.
Related Tags :
Next Story