சிங்கு, காசிப்பூர், சிக்ரி எல்லையில் இணைய சேவை முடக்கம் நாளை இரவு 11 மணி வரை நீட்டிப்பு
சிங்கு, காசிப்பூர், சிக்ரி எல்லையில் இணைய சேவை முடக்கம் நாளை இரவு 11 மணி வரை நீட்டித்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2 மாதங்களுக்கு மேலாக அவர்களது போராட்டம் நீடித்தபடி உள்ளது. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.
இந்தநிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500 போலீசார் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதுதொடர்பாக டெல்லி போலீசார் 33 வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் டெல்லி புறநகரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது. திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் இந்த போராட்டம் 68வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காசிப்பூர், சிக்ரி எல்லையில் இணைய சேவையை நாளை இரவு 11 மணி வரை நீட்டித்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story