2021-22 பட்ஜெட்: ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினரை நிர்மலா சீதாராமன் ஏமாற்றிவிட்டார்; ப.சிதம்பரம் தாக்கு


2021-22 பட்ஜெட்: ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினரை நிர்மலா சீதாராமன் ஏமாற்றிவிட்டார்; ப.சிதம்பரம் தாக்கு
x
தினத்தந்தி 2 Feb 2021 12:25 AM IST (Updated: 2 Feb 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஏழை மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர், புலம்பெயர் தொழிலாளிகள், விவசாயிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏமாற்றிவிட்டார் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

கொடுமையான அடி

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

நாட்டின் ஏழை மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர், புலம்பெயர் தொழிலாளிகள், விவசாயிகள், தொழில்துறையினர் என பலரையும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏமாற்றிவிட்டார்.

பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு பொருட்கள் மீது வரி விதித்திருப்பது, அவருடைய பேச்சைக் கவனித்த எம்.பி.க்களுக்கே புரியவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு, சராசரி குடிமக்கள், விவசாயிகள் மீதான கொடுமையான அடி. டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.

புதிய வரிகளில் மாநிலங்களுக்கு பங்கு கிடைக்காது என்பதால், இது கூட்டாட்சி தத்துவத்துக்கும் கொடுமையான அடி.

பட்ஜெட் தோல்வி
பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய இரு முக்கியமான துறைகளிலும் இந்த பட்ஜெட் தோல்வி அடைந்துவிட்டது.

பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் பெரிதாக உயர்வில்லை. கொரோனா தடுப்பூசிக்கான ஒரு தடவை செலவையும் கழித்துவிட்டால், சுகாதாரத்துறைக்கும் அதிகமான ஒதுக்கீடு இல்லை.நடப்பாண்டின் வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் அரசின் கணிப்பையே மிஞ்சிவிட்டன.

முட்டாள்கள் அல்ல
எதிர்பார்த்ததைப் போலவே, தேர்தல் நடைபெறப்போகும் மாநிலங்களில் நிதி மந்திரி சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறார். அவர், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பெரிய மூலதன செலவுகளை அறிவித்திருக்கிறார்.

மக்கள் முட்டாள்கள் அல்ல. இவை எல்லாம் அறிவிப்புகள்தான், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, அவை நிறைவேற்றப்படும் பல ஆண்டுகளிலேயே இந்த தொகைகள் செலவழிக்கப்படும் என்று அவர்களுக்கு தெரியும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story