7 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை: பல கோடி சொத்துகள் குவிப்பு கண்டுபிடிப்பு


பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள்
x
பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள்
தினத்தந்தி 2 Feb 2021 8:19 PM IST (Updated: 2 Feb 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 7 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 30 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த 7 அதிகாரிகளும் தங்களது வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 7 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 30 இடங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த 7 அதிகாரிகளும் தங்களது வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மீது புகார்

கர்நாடகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி ஊழல் தடுப்பு படை போலீசார் அதிர்ச்சி அளிப்பது வழக்கம். இந்த நிலையில், அரசு அதிகாரிகள் சிலர் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. புகார்கள் வந்த அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்கள்.

குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர். இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 7 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என 30 இடங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இணை இயக்குனர்

அதன்படி, பெங்களூருவில் கூட்டுறவு துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் பாண்டுரங்கா கரக். இவருக்கு சொந்தமான பெங்களூரு விஜயநகரில் உள்ள வீடு, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு, ஒசதுர்காவில் உள்ள உறவினா் வீடு, பெங்களூருவில் உள்ள பாண்டுரங்காவின் அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று காலை 6 மணியில் இருந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது விஜயநகரில் உள்ள பாண்டுரங்காவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு சொந்தமாக 5 வீடுகள், விவசாய நிலங்கள் இருப்பதும், வங்கி கணக்கில் பல லட்சம் இருப்பதும் தெரியவந்தது.  இதுபற்றி அறிந்ததும் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டு குல்தீப் ஜெயின், விஜயநகரில் உள்ள பாண்டுரங்கா வீட்டுக்கு விரைந்து சென்றார். பின்னர் அவரது வீட்டில் சிக்கிய நகைகள், பணம், சொத்து பத்திரங்களை அவர் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், அதிகாரி பாண்டுரங்கா தனது வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது.

உதவி என்ஜினீயர்

இதுபோன்று, பெங்களூரு புறநகர் மாகடியில் பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் சென்னபசப்பா. இவரது சொந்த ஊர் கலபுரகி மாவட்டம் ஆகும். இதையடுத்து, சென்னபசப்பாவுக்கு சொந்தமான கலபுரகியில் உள்ள வீடுகள், மாகடியில் உள்ள அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். கலபுரகியில் 8 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, தெலுங்கானாவில் நிலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர அவரது வீட்டில் இருந்து நகைகள், பணம், கார்கள் மற்றும் சொத்து பத்திரங்களும் போலீசாருக்கு கிடைத்தது. அவரது வங்கி கணக்குகள், வங்கி லாக்கரை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதன்பிறகு தான், அவரது சொத்து விவரங்கள் பற்றி தெரிய வரும் என்றும் ஊழல் தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி

இதுபோன்று, கோலார் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜய்குமார். இவருக்கு சொந்தமான சிந்தாமணி, கோலார், பெங்களூருவில் உள்ள வீடுகள் மற்றும் அவரது அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்தும் நகைகள், பணம் சிக்கியது. மேலும் சொத்து பத்திரங்களை கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர, கொப்பல் அரசு ஆஸ்பத்திரி அதிகாரி சீனிவாஸ், தார்வார் மாவட்டம் நாராயணபுரா வனத்துறை அதிகாரி சீனிவாஸ், மங்களூரு மாநகராட்சியின் நகர வளர்ச்சி திட்ட இணை இயக்குனர் ஜெயராஜ் ஆகிய அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

லாக்கரில் ரூ.56 லட்சம்

இதுபோல, தார்வார் மாவட்டம் சிக்காவியில் சிறிய நீர்ப்பாசனத்துறை உதவி என்ஜினீயராக இருந்து வருபவர் தேவராஜ் கல்லேஷ். இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்திய போது அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனெனில் அவரது உறவினருக்கு வங்கி ஒன்றில் லாக்கர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாக்கரை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம், ஏராளமான தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேவராஜ் கல்லேசுக்கு சொந்தமான லாக்கரில் ரூ.56 லட்சம் ரொக்கம் மற்றும் 400 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் தனது மனைவி, குடும்பத்தினர் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்திருந்தார். தேவராஜ் கல்லேசுக்கு சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல கோடி ரூபாய்க்கு...

கர்நாடகத்தில் அரசு அதிகாரிகளான பாண்டுரங்கா, சென்னபசப்பா, சீனிவாஸ், தேவராஜ் கல்லேஷ், விஜய்குமார், கொப்பல் மாவட்டதை சேர்ந்த சீனிவாஸ், ஜெயராஜ் ஆகிய 7 பேரின் வீடு, அலுவலகங்கள் என 30 இடங்களில் நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு வரை சோதனை நடத்தப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் தங்களது வருமானத்தை காட்டிலும் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது வீடுகளில் சிக்கிய தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள், வாகனங்களை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.

7 அதிகாரிகளும் வருமானத்திற்கு அதிகமாக எத்தனை கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்துள்ளனர் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 7 பேரும் சட்டவிரோதமாக சொத்துகள் சேர்த்திருப்பது உறுதியாகி இருப்பதாகவும் ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 அரசு அதிகாரிகளின் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story