மார்ச் முதல் வாரத்தில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை தொடங்கும்


மார்ச் முதல் வாரத்தில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை தொடங்கும்
x
தினத்தந்தி 2 Feb 2021 5:38 PM GMT (Updated: 2 Feb 2021 5:38 PM GMT)

கடந்த ஓராண்டாக காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைகள் நடந்த நிலையில் வரும் மார்ச் முதல் சுப்ரீம்கோர்ட்டில் நேரடி விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு மார்ச் கடைசி வாரம் முதல் சுப்ரீம் கோர்ட்  வழக்கு விசாரணைகள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றன. இந்த காணொலி காட்சி மூலமே விசாரணைகள் நடத்தப்பட்டு பல முக்கியமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கினர்.

கிட்டதிட்ட ஓராண்டாக காணொலி காட்சி மூலமே விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் பெரும்பாலும் விலக்கிக் கொள்ளப்பட்டதால் வழக்கம் போல் நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

 சமீபத்தில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் மற்றும் பிற வழக்கறிஞர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  நேரடி விசாரணைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனக்கோரி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

மேலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கும் விசாரணைகளால் வழக்கறிஞர்கள் பல்வேறு மன  உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக அவர்கள் கூறினர். இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘சுப்ரீம் கோர்ட்டில்  நேரடி விசாரணைகள் வரும் மார்ச் முதல் வாரத்திற்குள் தொடங்கப்படலாம். நேரடி விசாரணையை தொடங்க நீதிபதிகள் தயாராக உள்ளனர்.

ஆனால்  பதிவுத்துறை பல்வேறு மருத்துவ / தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய மற்றும் தீர்க்க முயற்சிக்கிறதுஎன கூறினார்.

இந்த நிலையில் மார்ச் முதல் வாரத்திற்குள் வழக்குகளின் நேரடி   விசாரணையை  மீண்டும் தொடங்கப்படலாம் "2021 மார்ச் முதல் வாரத்தில் இருந்து நீதிமன்றங்கள் அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்கு தொழில்நுட்ப சிக்கல்களை விரைவாக தீர்க்குமாறு பொதுச்செயலாளர் நீதிபதி பாப்டேவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது   என்று இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில்  வரும் மார்ச் முதல் நேரடி விசாரணை நடக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் வழக்கமான நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story