இந்தியாவில் 9 மாதங்களில் முதல் முறை: ஒரு நாள் கொரோனா பலி 100-க்கும் கீழே வந்தது


இந்தியாவில் 9 மாதங்களில் முதல் முறை: ஒரு நாள் கொரோனா பலி 100-க்கும் கீழே வந்தது
x
தினத்தந்தி 3 Feb 2021 12:20 AM IST (Updated: 3 Feb 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 9 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பலி 100-க்கும் கீழே வந்தது.

மிகக்குறைந்த உயிர்ப்பலி
உலகளவில் கொரோனாவின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும்கூட, உயிர்ப்பலியை கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி மிகக்குறைவு ஆகும்.

அந்த வகையில் நேற்று ஒரு நாள் கொரோனா பலி என்பது 100-க்கும் கீழாக (94) வந்து விட்டது. 9 மாதங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு, கொரோனா வைரசால் ஏற்படும் உயிர்ப்பலி குறைந்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா இறப்புவிகிதம் 1.43 சதவீதமாக குறைந்து விட்டது.

மராட்டியம் முதல் இடம்
நேற்று பலியான 94 பேரில், 27 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவார்கள். கேரளாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலியில் தொடர்ந்து மராட்டிய மாநிலம் (51 ஆயிரத்து 109 இறப்புகள்) முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் தமிழகம் நீடிக்கிறது. மூன்றாம் இடத்தில் கர்நாடகம் உள்ளது. அங்கு 12 ஆயிரத்து 220 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

பலியானோரில் 70 சதவீதத்தினர் இணைநோயுடன் கொரோனா தாக்கியதில் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

ஒரு நாள் பாதிப்பு குறைந்தது
நேற்று ஒரு நாளில் புதிதாக 8,635 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இதுதான் 8 மாதங்களில் மிகக்குறைந்த ஒரு நாள் பாதிப்பு ஆகும்.

இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 245 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 6 லட்சத்து 59 ஆயிரத்து 422 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 8,635 பேருக்குத்தான் கொரோனா புதிதாக பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

இந்தியாவில் இதுவரை 19 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 57 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

கொரோனா மீட்பு
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கியவர்களை மீட்பதில் உலகளவில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. அந்த வகையில் நேற்றும்கூட 13 ஆயிரத்து 423 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒரு நாளில் புதிதாக பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையை விட, மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.

நேற்று நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் 5,215 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் மராட்டிய மாநிலத்தில், 3,289 பேர் கொரோனாவில் கோரப்பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீட்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 48 ஆயிரத்து 406 ஆக உள்ளது.கொரோனா மீட்பு விகிதம் என்பது 97.05 ஆக அதிகரித்துள்ளது.

14-வது நாளாக சாதனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை தொடர்ந்து 14-வது நாளாக 2 லட்சத்துக்குள் இருக்கிறது என்பது ஒரு சாதனை ஆகும்.

தற்போது 1 லட்சத்து 63 ஆயிரத்து 353 பேர் கொரோனாவில் இருந்து விடுபட தொடர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1.52 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story