டெல்லி டிராக்டர் பேரணி பற்றி செய்தி வெளியீடு: மூத்த பத்திரிகையாளர்கள் மீதான வழக்கை மறுபரிசீலனை செய்யுங்கள்; 3 மாநில அரசுகளுக்கு ஐ.என்.எஸ். கோரிக்கை
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி குறித்து செய்தி வெளியிட்டதற்காக, மூத்த பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் (ஐ.என்.எஸ்.) கோரிக்கை விடுத்துள்ளது.
விவசாயிகள் பேரணி
டெல்லியில் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று விவசாய சங்கங்கள் டிராக்டர் பேரணி நடத்தின. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது.
நவ்ரீத்சிங் என்ற விவசாயி பலியானார். அவர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக முதலில் தகவல் பரவியது. ஆனால், அந்த விவசாயி டிராக்டர் கவிழ்ந்து பலியானதாகவும், உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் எதுவும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்குகள் பதிவு
இதையடுத்து, பொய் செய்தி வெளியிட்டதாக முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் மற்றும் 6 மூத்த பத்திரிகையாளர்கள் மீது டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டன.அதன் அடிப்படையில், போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர்.
பத்திரிகை அதிபர்கள் சங்கம் கண்டனம்
இந்தநிலையில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் (ஐ.என்.எஸ்.) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.என்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விவசாயிகள் போராட்டம் பற்றி செய்தி வெளியிட்டதற்காக மூத்த பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச போலீசார் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த அச்சு ஊடகங்களின் சார்பில், இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்க தலைவர் எல்.ஆதிமூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறுபரிசீலனை
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு டெல்லி, உத்தபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச அரசுகளை இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.அதன்மூலம், பத்திரிகைகள் தங்களின் உரிமைகள் பறிபோகாமல், அச்சமின்றி பணியாற்ற வழிவகுக்குமாறு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story