பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிவசேனா மாநிலம் தழுவிய போராட்டம்; பா.ஜனதா போட்டி போராட்டம் + "||" + Shiv Sena protests across petrol, diesel, cooking gas prices; BJP competition
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிவசேனா மாநிலம் தழுவிய போராட்டம்; பா.ஜனதா போட்டி போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிவசேனா மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. மின்கட்டண விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா போட்டி போராட்டம் நடத்தியது.
உத்தவ் தாக்கரே அழைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உச்சத்தை தொட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்ந்து உள்ளது. நேற்று மும்பையில் லிட்டர் பெட்ரோல் ரூ.93.49-க்கும், டீசல் ரூ.83.99-க்கு விற்பனை செய்யப்பட்டது. கியாஸ் சிலிண்டர் விலை ரூ.719 ஆக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கட்சியினருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார்.
மாட்டுவண்டி பேரணி
இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் மற்றும் ரெயில் நிலையங்கள் முன் சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அவர்கள் மாட்டு வண்டி, சைக்கிள் பேரணி நடத்தினர். மேலும் பெண்கள் காலி சிலிண்டர்களுடனும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல மோட்டார் சைக்கிளை கைவண்டியில் வைத்தும் தள்ளி சென்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை குறைக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
மந்திரி தலைமையில்...
மும்பையில் மந்திரி அனில் பரப் தலைமையில் சிவசேனாவினர் பாந்திரா கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர். தாராவியில் கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம் தலைமையில் போராட்டம் நடந்தது. இதேபோல காந்திவிலி ரெயில் நிலையம், போரிவிலி, பைகுல்லா, உள்ளிட்ட இடங்களில் சிவசேனாவினர் போராட்டம் நடத்தினர். தானேயில் பெட்ரோல் டீசல், விலை உயர்வை கண்டித்து சிவசேனா கட்சியினர் பேரணி நடத்தினர். இதில் மேயர் நரேஷ் மாஸ்கே, ரவீந்திர பாடக் எம்.எல்.சி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் புனே, நவிமும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிவசேனா சார்பில் போராட்டங்கள் நடந்தன.
இந்தநிலையில் பெட்ரோல், டீசலுக்கு விதித்து உள்ள வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.
பா.ஜனதா போராட்டம்
இதேபோல சிவசேனாவுக்கு போட்டியாக நேற்று மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தில் அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டதை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மின் நிறுவன அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாண்டுப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. கிரித் சோமையா கைது செய்யப்பட்டார். வடலா பெஸ்ட் டெப்போ அருகில் நடந்த போராட்டத்தில் காளிதாஸ் கோலம்கர் எம்.எல்.ஏ., பிராத் லாட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மின் கட்டண விவகாரத்தில் பா.ஜனதாவின் போராட்டம் தோல்வியை தழுவி உள்ளதாக மின்சார துறை மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு கால மின் கட்டணத்தை 79 சதவீதம் மக்கள் செலுத்திவிட்டதாகவும் அவர் தொிவித்தார்.
மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்து தரும்படி சிவசேனா மந்திரி அனில் பரப் தன்னை கட்டாயப்படுத்தினார் என்று வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே நீதிபதியிடம் பரபரப்பு கடிதம் வழங்கினார்.