கொரோனா தடுப்பூசி அனுமதிக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர்


கொரோனா தடுப்பூசி அனுமதிக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர்
x
தினத்தந்தி 5 Feb 2021 9:08 PM GMT (Updated: 5 Feb 2021 9:08 PM GMT)

கொரோனா தடுப்பூசி அனுமதிக்கான விண்ணப்பத்தை பைசர் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இதற்கான பின்னணி தெரிய வந்துள்ளது.

பைசர் தடுப்பூசி விண்ணப்பம்
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மருந்து நிறுவனமான பைசர் நிறுவனம், கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து இங்கிலாந்து, பக்ரைன் போன்ற நாடுகளில் அவசர கால பயன்பாட்டு ஒப்புதலை பெற்றுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலும் அவசரகால பயன்பாட்டு அனுமதிக்காக பைசர் நிறுவனம், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனுமதிக்காக விண்ணப்பித்த முதல் நிறுவனம் இந்த பைசர்தான்.

வாபசும், பின்னணியும்
இந்த நிலையில் பைசர் நிறுவனம் தனது அவசர கால பயன்பாட்டு அனுமதி விண்ணப்பத்தை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் இருந்து வாபஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்திருந்தோம். இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் வல்லுனர் குழு கூட்டத்தில் கடந்த 3-ந் தேதி கலந்துகொண்டோம். அந்த கூட்டத்தில் நடந்த விவாதங்களுக்கு பின்னர், மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்படலாம் என புரிந்துகொண்டோம். எனவே நாங்கள் அளித்திருந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளோம்.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். கூடுதல் தகவல்களுடன் நாங்கள் எங்கள் விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பைசர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “இந்திய அரசின் பயன்பாட்டுக்கு எங்கள் தடுப்பூசியை கிடைக்கச்செய்வதில் உறுதியாக இருக்கிறோம். அவசர கால பயன்பாட்டு அனுமதிக்கு தேவையான வழியை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம். இது எதிர்காலத்தில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும்” என கூறினார்.

Next Story