நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டம்


நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2021 2:05 AM GMT (Updated: 6 Feb 2021 2:05 AM GMT)

டெல்லியை தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விவசாயிகள் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக விவசாயிகள் 6-ந் தேதி டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

ஏற்கனவே குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி அதில் பெரும் வன்முறைகள் ஏற்பட்ட நிலையில், இந்த சாலை மறியல் போராட்டத்தில் போலீசார் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

குறிப்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி நேற்று ஆலோசனை நடத்தி, தலைநகரம் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சிங்கு, சிக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 

காசிப்பூர் எல்லையில் தடுப்பு வேலிகளுக்கு பின்னால் சாலைகளில் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. மொத்தத்தில் தலைநகர் டெல்லி, போலீஸ் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டபடி மறியல் போராட்டம் இல்லை என்று போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சம்யுக்த் கிசான் மோர்ச்சா நேற்று திடீரென அறிவித்தது.

அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அறிவிக்கப்பட்டபடி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மறியல் போராட்டம் நடைபெறும், அதுவும் அமைதியான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல் போராட்டத்தின்போது, ஆம்புலன்சுகள் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது என்றும், சாலை மறியல் போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு முடியும், அப்போது வாகனங்கள் ஒரு நிமிட நேரம் ஹாரன் அடித்து ஒலி எழுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story