மாவட்ட செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தல்; கர்நாடகத்தில் தடையை மீறி விவசாயிகள் சாலை மறியல் + "||" + Urging the repeal of new agricultural laws; Farmers block roadblock in Karnataka

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தல்; கர்நாடகத்தில் தடையை மீறி விவசாயிகள் சாலை மறியல்

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தல்; கர்நாடகத்தில் தடையை மீறி விவசாயிகள் சாலை மறியல்
புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று கர்நாடகம் முழுவதும் விவசாயிகள் தடையை மீறி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையொட்டி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள்
ஆனால் இந்த புதிய சட்டங்களால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகும் என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ஆனால் எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற மாட்டாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

பேரணியில் வன்முறை
இந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது. டிராக்டர் கவிழ்ந்ததில் இளம் விவசாயி ஒருவர் இறந்தார்.

இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதற்கிடையே டெல்லி எல்லையை மூடிய மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இரும்பு கம்பிகள், இரும்பு ஆணிகளை சாலையில் அடித்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தடையை மீறி மறியல் போராட்டம்
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும் பிப்ரவரி மாதம் 6-ந் தேதி (அதாவது நேற்று) நாடு தழுவிய அளவில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்து இருந்தன. இந்த போராட்டத்திற்கு கர்நாடக விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். 

மேலும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காவிட்டாலும் திட்டமிட்டப்படி தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்க தலைவர்கள் குருபூர் சாந்தகுமார், கோடிஹள்ளி சந்திரசேகர், படகலபுரா நாகேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று கர்நாடகத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளை மறிக்கும் போராட்டம் நடந்தது. மதியம் சரியாக 12 மணிக்கு தொடங்கிய போராட்டம் 3 மணி வரை நீடித்தது. பெங்களூருவில் இருந்து பல்லாரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எலகங்கா பகுதியில் குருபூர் சாந்தகுமார் தலைமையில் நேற்று மதியம் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

குருபூர் சாந்தகுமார் கைது
இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டத்தை கைவிடும்படி விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதனை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து குருபூர் சாந்தகுமார் உள்பட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர்.

அப்போது குருபூர் சாந்தகுமார் நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. மத்திய-மாநில அரசுகளுக்கு கண் தெரியவில்லை. காதும் கேட்காமல் போய் விட்டது. இதனால் தான் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இது கண்டிக்கதக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு-புனே நெடுஞ்சாலை
பெங்களூரு-சென்னை, பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-புனே, நைஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை அரங்கேற்றினர். இதனால் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்தித்தனர்.

பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுமதியின்றி போராட்டம் நடத்திய கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜையும் போலீசார் கைது செய்து இருந்தனர். பெங்களூரு தவிர ராமநகர், மண்டியா, பெலகாவி, மைசூரு, கோலார் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

ஹோமம் வளர்த்த விவசாயிகள்
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா மக்கனூர் கிராசில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகள் நடுரோட்டில் ஹோமம் வளர்த்தனர். பெலகாவி தாலுகா ஹரிகேபாகேவாடி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில் மத்திய அரசுக்கு எதிராக வாசகம் எழுதினர்.

பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் துமகூரு அருகே பெண் விவசாயிகள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள். இதுபோல கோலாரிலும் பெண் விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டத்தை நடத்தினர். விஜயாப்புரா-கலபுரகி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். உப்பள்ளி-விஜயாப்புரா தேசிய நெடுஞ்சாலையில் கலந்து கொண்ட ஒரு சிறுவன் தனது தோளில் பச்சை நிற துண்டை அணிந்து வந்து இருந்தான். ஹாசன், மைசூருவில் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராடினார்கள்.

பலத்தபோலீஸ் பாதுகாப்பு
ராமநகரில் சாலையில் மதிய உணவை சமைத்து சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். பெலகாவியில் போராட்டம் நடத்திய பெண் விவசாயிகள் தலையில் கல்லை சுமந்து வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதுபோல மற்ற மாவட்டங்களிலும் விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்த்தனர். தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் 
கைது செய்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டங்களையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டமில்லை - முதல்வர் எடியூரப்பா
கர்நாடக மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
2. கர்நாடகத்தில் இன்று முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க முடிவு - துணை முதல்வர் லட்சுமண் சவதி தகவல்
கர்நாடக மாநிலத்தில் இன்னும் 2 நாட்களில் இயல்புநிலை திரும்பும் என அந்த மாநிலத்தின் துணை முதல்வர் லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.
3. “கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது - தலைமை செயலாளர் ரவிக்குமார் திட்டவட்டம்
கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் தலைமை செயலாளர் ரவிக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
5. கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவை தடுப்பது குறித்து நிபுணர் குழு ஆய்வறிக்கை தாக்கல்
மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவுகளை தடுப்பது குறித்த ஆய்வறிக்கையை கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம், நிபுணர் குழு வழங்கியது.