அரசின் சதியால் விவசாயிகள் போராட்டம் மேலும் வலிமை பெற்றுள்ளது : ராகேஷ் திகாய்த்


அரசின் சதியால் விவசாயிகள்  போராட்டம் மேலும் வலிமை பெற்றுள்ளது : ராகேஷ் திகாய்த்
x
தினத்தந்தி 7 Feb 2021 8:59 PM GMT (Updated: 7 Feb 2021 8:59 PM GMT)

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி முதல்  விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.  விவசாயிகள் முற்றுகையிட்டு நடத்தி வருகிற இந்த போராட்டம், சர்வதேச அளவில் கவனத்தை கவர்ந்ததுடன், நாடாளுமன்றத்திலும் புயலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சர்கி தத்ரி பகுதியில் மஹாபஞ்சாயத் நிகழ்ச்சிக்கு விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்தன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியிருந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது: தேசியக் கொடி விவகாரத்தை வைத்து நம்மை அவர்கள் பலவீனப்படுத்தப்ப முயன்றனர். நமக்கு எதிராக அவர்கள் சதியில் ஈடுபட்டனர். ஆனால், இரண்டு நாட்களில் முன்பை விட வலிமையாக நாம் வந்துள்ளோம். விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கைகளாகும். 

விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என தற்போது இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதிகாரத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என்று  அவர்கள் கோரிக்கை விடுத்தால் என்னவாகும்? டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் வஞ்சகத்துடன்  நமது விவசாயிகள் கொண்டு செல்லப்பட்டதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்றார். 

Next Story