உத்தரகாண்ட்: வெள்ளத்தால் 5 பாலங்கள் சேதம், 13 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


உத்தரகாண்ட்: வெள்ளத்தால் 5 பாலங்கள் சேதம், 13 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2021 10:31 PM GMT (Updated: 7 Feb 2021 11:18 PM GMT)

வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த குடிசைகளும், வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டு விட்டன

டேராடூன்

இமயமலை பகுதியில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின், சமோலி மாவட்டத்தில் தாலிகங்கா ஆற்று நீரையும், அதன் துணைநதியான அலெக் நந்தா ஆற்று நீரையும் பயன்படுத்தி, ரிஷிகங்கா நீர்மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நீர்மின் திட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது காலை சுமார் 10.45 மணிக்கு, ஜோஷிமடம் அருகே நந்தாதேவி என்ற பெரிய பனிப்பாறை திடீரென உடைந்தது. இதனால் தாலிகங்கா ஆற்றிலும், அதன் துணை நதியான அலெக்நந்தாவிலும் பெரும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தால் அலெக்நந்தா ஆற்றில் நீர்மட்டம் கிடுகிடுவென பல அடிகள் உயர்ந்து, ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலும் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. அதில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 150 பேருடன் தொடர்பு கொள்ள முடியாமல்போய்விட்டது.

வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த குடிசைகளும், வீடுகளும் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்து வெள்ளத்தில் போய் விட்டன. தாலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாரி, தெஹ்ரி, ருத்ரபிரயாக், அரித்துவார், டேராடூன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அவை உஷார்படுத்தப்பட்டுள்ளன. 

தபோவன் பகுதி சாலைகளில் இருந்த 5 பாலங்களை வெள்ளம் அடித்துச்சென்றது. இதனால், 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராமத்தில் உள்ள மக்களுக்கு வான் வழி மூலமாக உணவு பொட்டலங்களை விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வெள்ள பெருக்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மாயமான 170- பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


Next Story