விஜயநகரை புதிய மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியீடு


விஜயநகர் மற்றும் பல்லாரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள தாலுகாக்கள் விவரம்
x
விஜயநகர் மற்றும் பல்லாரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள தாலுகாக்கள் விவரம்
தினத்தந்தி 8 Feb 2021 2:48 PM GMT (Updated: 8 Feb 2021 2:48 PM GMT)

பல்லாரியை 2 ஆக பிரித்து விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

பெங்களூரு:

விஜயநகர் மாவட்டம்

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து விஜயநகர் மாவட்டம் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதுகுறித்து பொதுமக்கள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு ஒசப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை கர்நாடக அரசு நேற்று பிறப்பித்துள்ளது.

அதன்படி விஜயநகர் மாவட்டத்தில் ஒசப்பேட்டை (தலைநகர்), கூட்லகி, ஹகிரிபொம்மனஹள்ளி, கொட்டூர், ஹூவினஹடகலி, ஹரப்பனஹள்ளி ஆகிய தாலுகாக்கள் இடம் பெறும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களாக சித்ரதுர்கா, பல்லாரி, கொப்பல், கதக், ஹாவேரி, தாவணகெரே ஆகியவை இருக்கின்றன.

பா.ஜனதா எதிர்ப்பு

பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி (தலைநகர்), குருகோடு, சிரகுப்பா, கம்பளி, சன்டூர் ஆகிய தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன. பல்லாரி மாவட்டத்தை பிரிக்க அந்த மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கர்நாடக அரசு விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அரசாணையை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story