மாநில அந்தஸ்து பிரச்சினை பற்றி தேர்தலின்போது மட்டும் ரங்கசாமி பேசுவது ஏன்? புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி


மாநில அந்தஸ்து பிரச்சினை பற்றி தேர்தலின்போது மட்டும் ரங்கசாமி பேசுவது ஏன்? புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 10 Feb 2021 12:35 AM GMT (Updated: 10 Feb 2021 12:35 AM GMT)

மாநில அந்தஸ்து பிரச்சினை பற்றி தேர்தலின் போது மட்டும் ரங்கசாமி பேசுவது ஏன்? என்று நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அந்தஸ்து
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டபோது அரசு ஊழியர்கள் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டார்கள்.ஏனெனில் மாநில அந்தஸ்து என்றால் மத்திய அரசின் மானியம் 41 சதவீதம்தான் கிடைக்கும். ஆனால் சிறப்பு மாநில அந்தஸ்து என்றால் 90 சதவீத மானியம் கிடைக்கும். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை.

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது புதுவையை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்தார். அதற்கு அ.தி.மு.க.வும் ஆதரவு அளித்தது. அதை எதிர்த்து புதுவையில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு இணைப்பு திட்டத்தை கைவிட்டது. மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் சிலவற்றை சீர்செய்ய முடியும்.

நிபந்தனையற்ற ஆதரவு
மாநிலத்தில் பிற கட்சி ஆட்சி இருக்கும்போது மத்திய அரசு கவர்னரை பயன்படுத்தி மாநில உரிமையை படிப்படியாக பறிக்கிறது. கவர்னர் கிரண்பெடி மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளார். இதுதொடர்பாக நான் பலமுறை பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்து புகார் கூறியுள்ளேன். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தி உள்ளேன்.

அனைத்து எம்.எல்.ஏ.க் களையும் அழைத்துச் சென்று உள்துறை மந்திரியிடம் கோரிக்கை வைத்தேன். உள்துறை மந்திரியும் அதை பரிசீலிப்பதாக கூறினார். சு‌‌ஷ்மா சுவராஜ் தலைமையில் வந்த நாடாளுமன்ற குழுவும் மாநில அந்தஸ்து குறித்து பரிந்துரைத்தது.

கடந்த 2011-ம் ஆண்டு ரங்கசாமி புதிய கட்சியை ஆரம்பித்தபோது மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தார். 2014-ம் ஆண்டு மத்தியில் அமைந்த பாரதீய ஜனதா அரசுக்கு அவர் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தார். ஆனால் அவர் மத்திய அரசிடம் கேட்டுப்பெறாமல் இப்போது மாநில அந்தஸ்து பற்றி பேசுகிறார்.

நாங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மாநில அந்தஸ்து பெறபாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினோம். இதுதொடர்பாக வைத்திலிங்கம் எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் உத்தேசம் இல்லை என்று பதில் அளித்தது.

தேர்தல் நேரத்தில் மட்டும்...
அதன்பின் புதுவை சட்டமன்றத்திலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் அப்போது எல்லாம் ரங்கசாமி சட்டசபைக்கு வந்து மாநில அந்தஸ்துபற்றி பேசவில்லை.ஆனால் இப்போது மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா? என்று கேள்வி எழுப்புகிறார். இப்போது மாநில அந்தஸ்துபற்றி பேசும் ரங்கசாமி நாங்கள் பிரதமர், மத்திய மந்திரிகளை மாநில அந்தஸ்துக்காக சந்தித்தபோது ஏன் வரவில்லை?

மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்கவும் தயார் என ரங்கசாமி கூறியுள்ளார். தேர்தல் புறக்கணிப்பினை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் எங்கள் கட்சி தலைமையின் அனுமதிபெற்று முடிவு எடுப்போம்.மாநில அந்தஸ்துக்காக நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளாக பலமுறை குரல் கொடுத்துள்ளோம். ஆனால் அப்போது ஏன் ரங்கசாமி குரல் கொடுக்கவில்லை? தேர்தல் நேரத்தில் மட்டும் பேசவேண்டிய அவசியம் என்ன? தனிப்பட்ட முறையில் மாநில அந்தஸ்து பெறுவதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. தேர்தல் வரும்போது மட்டும் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து பேசக்கூடாது. அவர் மனமுவந்து பேசவேண்டும்.

புறக்கணிக்கலாம்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டை ஏற்க முடியாது என்று கவர்னர் கேள்வி கேட்கும்போது, சட்டமன்றத்துக்கு என்ன மரியாதை உள்ளது. புதுவையில் ரோடுபோட தேவையான நிதி உள்ளது. ஆனால் அதை செய்யவிடாமல் செய்தது கவர்னரும், அதிகாரிகளும்தான். ஒரு பணிக்கு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நாங்கள் கோப்பு அனுப்பினால் கவர்னர் கிரண்பெடி அதை மாற்றி எழுதுகிறார். இதுபோன்ற கவர்னரின் செயல்பாட்டை கடந்த 4½ வருடங்களாக ரங்கசாமி தட்டிக்கேட்காதது ஏன்?

கவர்னரின் செயல்பாட்டினால் நான் தினமும் க‌‌ஷ்டத்தை அனுபவித்து வருகிறேன். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அனைத்து கட்சிகளும் ஒத்துவந்தால் மாநில அந்தஸ்து பிரச்சினைக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கலாம். அதேநேரத்தில் கட்சி தலைமையின் முடிவுப்படியே நாங்கள் எந்த முடிவினையும் எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story