வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு


வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 11 Feb 2021 1:21 AM GMT (Updated: 11 Feb 2021 1:21 AM GMT)

“வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை. சந்தைகளை மூடவில்லை, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்கிறது. கொள்முதல் நடக்கிறது” என்று மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு எதிராக நாடு போராடும் வேளையிலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி பேசினார். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என அவர் அறிவித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், மக்களவையில் நடந்து வந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார்.

அப்போதும் அவர் விவசாயிகள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். அவர் கூறியதாவது:-

இந்த சபையும், நமது அரசும், அனைவரும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக தங்கள் கருத்துகளை கூறி வரும் விவசாயிகளை மதிக்கிறோம். அதனாலேதான், நமது மூத்த மந்திரிகள், தொடர்ந்து அவர்களுடன் பேசினார்கள். விவசாயிகள் மீது நமக்கு மிகுந்த மரியாதை உண்டு.

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், எந்த சந்தையும் மூடப்படவில்லை. அதேபோன்று குறைந்தபட்ச ஆதரவு விலைமுறை தொடர்கிறது. அந்த முறையின்கீழ் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் நடக்கிறது. இந்த உண்மைகளை புறக்கணித்துவிட முடியாது.

மக்கள் உண்மைகளை பார்க்க முடியும் என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல்தான், (எதிர்க்கட்சியினர்) நன்றாக திட்டமிட்டு இந்த சபையில் இடையூறு செய்து வருகிறார்கள். அவர்களது விளையாட்டுகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட முடியாது.

காங்கிரஸ் கட்சியானது, நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் வேறு நிலைப்பாடும் எடுத்திருக்கிறது. இதைப்போன்ற பிளவுபட்ட, குழப்பான கட்சியால் நாட்டுக்கு எந்த நன்மையும் செய்து விட முடியாது.

இவ்வாறு பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினை பற்றி குறிப்பிட்டார்.

3 வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி விளக்கியதால், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை, தவறான கணிப்புகளுக்கு மத்தியிலும் இந்தியா வெற்றிகரமாக நிர்வகித்து உள்ளது. இப்போது நமது நாடு, உலகின் நம்பிக்கை சுடராக மாறி உள்ளது.

கொரோனாவுக்கு பிந்தைய உலகம் மிகவும் மாறிவிட்டிருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் உலகளாவிய போக்குகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவேதான், இந்தியா சுயசார்பு இந்தியாவாக கட்டமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இது உலகளாவிய நன்மைகளை மேலும் நாடுகிறது.

இந்தியா ஒரு தேசமாக வாழ முடியாது என்று கணிப்புகள் வந்தது உண்டு. ஆனால் அவையெல்லாம் தவறானவை என்று நமது நாட்டின் மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். நாம் இப்போது உலகின் நம்பிக்கை சுடரொளி.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியை இந்தியா கையாண்டவிதம், ஒரு திருப்புமுனையாகும். அதன் வெற்றியை உலகம் பார்த்திருக்கிறது.

ஜனாதிபதியின் உரை இந்தியாவின் சங்கல்ப சக்தியை (உறுதியான சக்தியை) எடுத்துக்காட்டியது. அவரது வார்த்தைகள் இந்திய மக்களிடையே நம்பிக்கை உணர்வை உயர்த்தி இருக்கின்றன. புதிய நம்பிக்கையை தூண்டி விட்டிருக்கின்றன. ஒவ்வொரு இதயத்துக்கும் உத்வேகம் அளித்திருக்கின்றன.

ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது, ஏராளமான பெண் உறுப்பினர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். இது மிகப்பெரிய அறிகுறி. தங்கள் சிந்தனைகளால் இந்த சபை நடவடிக்கைகளை வளப்படுத்திய பெண்எம்.பி.க்களை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் பதில் உரைக்கு பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி பதில் அளித்து பேசியபோது, காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் வெளிநடப்பு செய்ததால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியபோது அந்த கட்சிகள் சபையில் இல்லை. தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story