ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்கள் இங்கு எழுப்பாமல், பாகிஸ்தானிலா எழுப்ப முடியும் மம்தாவுக்கு அமித்ஷா கேள்வி


Photo: Twitter/@BJP4India
x
Photo: Twitter/@BJP4India
தினத்தந்தி 11 Feb 2021 11:15 AM GMT (Updated: 11 Feb 2021 11:15 AM GMT)

மம்தா பானர்ஜி‘ ஜெய் ஸ்ரீ ராம் ’கோஷத்தில் கோபப்படுகிறார், ஆனால் சட்டமன்றத் தேர்தல் முடிவடையும் நேரத்தில் அவரே அதை முழக்கமிடுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று கூச்பேஹரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் போது கூறியதாவது:-

பா.ஜனதாவின் ‘பரிவர்த்தன் யாத்திரை’ மேற்கு வங்காளத்தில் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. முதல்வர், எம்.எல்.ஏக்கள் அல்லது அமைச்சர்களை மாற்றுவதற்காக அல்லது மேற்கு வங்கத்தை மாற்றுவதற்காக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்படவில்லை . ஊடுருவல், வேலையின்மை,  குண்டுவெடிப்பு ஆகியவற்றிலிருந்து மாநிலத்தை விடுவிப்பதற்கும், விவசாயிகளின் நிலையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் இந்த யாத்திரை நோக்கமாக  கொண்டது.

ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை முழக்கமிடுவது ஒரு குற்றமாக மாறிய சூழலை  திரிணாமுல் காங்கிரஸ் அரசு உருவாக்கியுள்ளது . “மம்தா திதி, ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கங்கள் இங்கு எழுப்பப்படாவிட்டால், அது பாகிஸ்தானிலா எழுப்ப முடியும்?

மம்தா பானர்ஜி‘ ஜெய் ஸ்ரீ ராம் ’கோஷத்தில் கோபப்படுகிறார், ஆனால் சட்டமன்றத் தேர்தல் முடிவடையும் நேரத்தில் அவரே அதை முழக்கமிடுவார்.”

தேர்தல் முடிவதற்குள் மம்தாவும்  ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவார் என நான் உறுதியளிக்கிறேன்.130 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், திரிணமூல் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மம்தா தனது மருமகனை அடுத்த முதல்வராக்குவதில் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகிறார்.

எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், கொலைகாரர்கள் ஒவ்வொருவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். மோடியுடன் எப்போதும் மம்தா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். சுபாஷ் நிகழ்ச்சியின் போது கூட அவர் சண்டையிட்டார். அந்த நிகழ்விலாது நீங்கள் அரசியல் செய்யாமல் இருந்திருக்கலாம் என கூறினார்.

Next Story