மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்க வாய்ப்பு


மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக  மல்லிகார்ஜுன கார்கே  தேர்ந்தெடுக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 12 Feb 2021 11:09 AM GMT (Updated: 12 Feb 2021 11:09 AM GMT)

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15-ம் தேதியுடன் முடிகிறது. அவருக்குப்பின் மாநிலங்களவைத் தலைவராக தேர்ந்தெடுப்பதில் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே இருவரின் பெயர்களும் கட்சிக்குள் பேசப்பட்டன.

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே  பரிந்துரைத்து, மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவுக்கு  காங்கிரஸ் தலைமை கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 15 ஆம் தேதி முடிந்தபின் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படுவது குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் கார்கே தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ரெயில்வே துறை அமைச்சராகவும், அதன்பின் மக்களவை எதிர்க்கட்சி்த் தலைவராகவும் கார்கே இருந்தார்.

கடந்த மக்களவையிலும் நடப்பு மக்களவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போதுமான எம்.பி.க்களை காங்கிரஸ் வைத்திருக்கவில்லை. இருப்பினும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையில் கடந்த மோடி ஆட்சியில் கார்கே செயல்பட்டார்.

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தி சரளமாகப் பேசவரும் என்பதால் ப.சிதம்பரத்தைவிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு ஏற்றாற்போல் முன்னாள் ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜியின் வீடு கார்கேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story