சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ராகுல்காந்தி இரங்கல்


சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ராகுல்காந்தி இரங்கல்
x
தினத்தந்தி 12 Feb 2021 11:20 AM GMT (Updated: 12 Feb 2021 11:20 AM GMT)

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு  சொந்தமான பட்டாசு  தொழிற்சாலை  அச்சங்குளத்தில்  உள்ளது.நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இதில், ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் உள்பட 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் மற்றும் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டடு வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் மாநில அரசு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Next Story