விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதம்: மத்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு


விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதம்: மத்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு
x
தினத்தந்தி 13 Feb 2021 2:39 AM GMT (Updated: 13 Feb 2021 2:39 AM GMT)

விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதம் குறித்து இந்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்களும் குரல் கொடுத்தனர்.   

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கடந்த ஆண்டு இறுதியில் .விவசாயிகள் மீது காவல் துறை கடுமையாக நடந்து கொண்டதாக விமர்சித்து இருந்ததோடு, போராட்டத்திற்கு ஆதரவான கருத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் இத்தகைய கருத்து மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இந்த பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என உடனடியாக வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்தது.

இதற்கிடையே, பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு அளிப்பதை பாராட்டியிருந்தார்.  
 
இந்நிலையில் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “விவசாயிகள் போராட்டத்தில் ஜனநாயகத்துக்கு ஏற்ற பேச்சுவார்த்தை பாதையை தேர்ந்தெடுத்த இந்தியாவின் முயற்சிகளை கனடா பிரதமர் பாராட்டியதாக தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரக ஊழியர்கள், வளாகங்களுக்கு பாதுகாப்பு வழங்க தனது அரசுக்கு பொறுப்பு உள்ளது  என ட்ரூடோ கூறியதாகவும் தெரிவித்தார். 

Next Story