சென்னராயப்பட்டணா அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், கலால் துறை சப்-இன்ஸ்பெக்டரும், அவருடன் சென்ற அவரது நண்பர்களான 3 என்ஜினீயர்களும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. பலியான 4 பேரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஹாசன்: சென்னராயப்பட்டணா அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், கலால் துறை சப்-இன்ஸ்பெக்டரும், அவருடன் சென்ற அவரது நண்பர்களான 3 என்ஜினீயர்களும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. பலியான 4 பேரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர்
பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் மஞ்சுநாத், சேத்தன், விக்ரம் மற்றும் அபிஷேக் ஆகியோர் ஆவர். நண்பர்களான 4 பேரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் ஆவார்கள். 4 பேருக்கும் முறையே 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 4 பேரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் சேத்தன் மட்டும் போலீஸ் மற்றும் அரசு பணிக்கு முயற்சித்து வந்தார். அதன்பேரில் தற்போது அவர் கலால் துறை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி இருந்தார்.
அவர் சிக்கமகளூருவில் பணி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் சேத்தன் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு காரில் புறப்பட்டார். அவர் சிக்கமகளூருவுக்கு சென்று பணியில் சேர இருந்தார். அவருடன், அவரது நண்பர்கள் மஞ்சுநாத், விக்ரம் மற்றும் அபிஷேக் ஆகியோரும் புறப்பட்டனர்.
கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்
இதில் காரை மஞ்சுநாத் ஓட்டியதாக கூறப்படுகிறது. மற்ற 3 பேரும் காரில் அவருடன் பயணித்து சென்றுள்ளனர். அவர்கள், ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா அருகே பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மஞ்சுநாத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி சேத்தன் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தை பார்த்து அப்பகுதி மக்களும், அந்த வழியாக சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடல்கள் மீட்பு
உடனடியாக அவர்கள் இதுபற்றி சென்னராயப்பட்டணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி பலியான சேத்தன் உள்பட 4 பேரின் உடல்களையும் மீட்டனர். அதையடுத்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த சேத்தன் உள்பட 4 பேரின் குடும்பத்தினரும் பெங்களூருவில் இருந்து ஹாசனுக்கு வந்தனர்.
மந்திரி ஆறுதல்
அவர்கள் ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த சேத்தன் உள்பட 4 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் சேத்தன் உள்பட 4 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்தில் 4 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பணியில் சேர சென்றபோது பலியான சோகம்
இந்த விபத்தில் பலியான சேத்தன் தற்போதுதான் கலால் துறை சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வாகி உள்ளார். அவர் சிக்கமகளூருவில் கலால் துறை சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் பணியில் சேர்வதற்காக புறப்பட்டு சென்றபோதுதான் விபத்தில் சிக்கி பலியானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.