லடாக் சென்று ஆய்வு செய்யும், பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Feb 2021 11:05 PM GMT (Updated: 13 Feb 2021 11:05 PM GMT)

பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழு, லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்குக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வந்தது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்திருந்தன.

எனினும் இந்த படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் சுமார் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தன. இதில் கடந்த மாதம் 24-ந்தேதி நடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து கவச வாகனங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் வீரர்களை திரும்பப்பெறுவது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில் பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சிலர் லடாக் சென்று, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரி உள்ளிட்ட மோதல் நடந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசனை செய்து, நிலைக்குழுவின் தலைவர் ஜூவல் ஓரன் (பா.ஜ.க.) முடிவு எடுப்பார் என தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலைக்குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story