போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை கிடையாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து


போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை கிடையாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 14 Feb 2021 12:34 AM GMT (Updated: 14 Feb 2021 12:34 AM GMT)

போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஊரடங்கு காலம் வரை போராட்டம் நீடித்தது. இதனிடையே, சாலையை மறித்து நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பை தடுக்கக்கோரி வக்கீல் அமித்சகானி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், ‘பொது இடங்கள், சாலைகள் போராட்ட கூடாரமாவதை ஏற்க முடியாது. நியாயமான கட்டுப்பாடுகளுக்கும், நாட்டின் பொது அமைதி, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றின் நலன்களுக்கும், போலீஸ் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு போராட்ட உரிமைகள் இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி டெல்லி ஷாகீன் பாகை சேர்ந்த கனீஸ் பாத்திமா கடந்த நவம்பர் 6-ந்தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருதா போஸ், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு கடந்த 9-ந்தேதி விசாரித்து உத்தரவிட்டது. அதன் விவரம் இணையத்தில் நேற்று முன்தினம் வெளியானது.

அந்த உத்தரவில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மறுஆய்வு மனு தொடர்பாக வாதங்களை முன்வைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம். மறுஆய்வு மனுவை பரிசீலித்ததில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே கூறப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. போராடும் உரிமை அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டு இருந்தாலும், அவை சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்திருந்தோம்.

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை கிடையாது. பிறரின் உரிமைகளை பாதிக்கும் வகையில் சாலைகளை மறித்து கூடாது. இதன்படி இந்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story