சட்டசபை தேர்தலில் கேரளாவில் கூடுதலாக 15 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் - சுனில் அரோரா தகவல்


சட்டசபை தேர்தலில் கேரளாவில் கூடுதலாக 15 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் - சுனில் அரோரா தகவல்
x
தினத்தந்தி 14 Feb 2021 9:23 PM GMT (Updated: 14 Feb 2021 9:23 PM GMT)

சட்டசபை தேர்தலில் கேரளாவில் கூடுதலாக 15 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையிலான உயர் மட்ட குழுவினர் திருவனந்தபுரம் வந்தனர். 

தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா பாதிப்பு இருந்த போதிலும் தேர்தலை சிறந்த முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஷூ, ஈஸ்டர் பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தலை நடத்த கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கேரளாவில் கூடுதலாக 15 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். 

கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமையில் இருப்போருக்கு இறுதியில் 1 மணி நேரம் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். சட்டசபை தேர்தலுடன், மலப்புரம் நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story