மத்திய அரசு ஆதரவு டுவிட் இந்திய பிரபலங்களின் டுவிட்டுக்கு பின்னால் 12 செல்வாக்கு மிக்கவர்கள் -மராட்டிய உள்துறை அமைச்சர்


மத்திய அரசு ஆதரவு டுவிட் இந்திய பிரபலங்களின் டுவிட்டுக்கு பின்னால்  12 செல்வாக்கு மிக்கவர்கள் -மராட்டிய  உள்துறை அமைச்சர்
x
தினத்தந்தி 15 Feb 2021 3:25 PM GMT (Updated: 15 Feb 2021 3:25 PM GMT)

லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் தேண்டுல்கர் ஆகியோரின் டுவீட்கள் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்று மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறி உள்ளார்.

நாக்பூர்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ்,நடிகை மியா கலிஃபா,   உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்களை  பொறுப்புடன் டுவீட் செய்யுங்கள் என  இந்தியா கூறி  இருந்தது.

சர்வதேச பிரபலங்களுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும்  பாரத ரத்னா விருந்து பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோர்  கருத்து வெளியிட்டனர்.

இது பலராலும்  விமர்சிக்கப்பட்டது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கிரிக்கெட் துறையை சார்ந்தவர்கள்  விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். மற்ற துறைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நான் சச்சினுக்கு பரிந்துரைக்கிறேன்" என்று பவார் கூறினார்.

மராட்டிய  நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பவார் சொன்னதை மீண்டும் வலியுறுத்தினார். "அரசாங்கம் இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. லதா மங்கேஷ்கர், சச்சின் தெண்டுல்கர் பெரியவர்கள், ஆனால் மிகவும் எளிமையானவர்கள். டுவீட் செய்ய அரசாங்கம் கேட்டதன் காரணமாக அவர்கள் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது" என்று அவர் கூறினார்.

மத்திய அரசுக்கு  ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரபலங்கள்  கருத்து வெளியிட பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததா  என்பதை அறிய டுவீட் குறித்து போலீசார் விசாரணை  நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற ஆதரவு தெரிவிப்பதற்காக  இந்த தேசிய ஹீரோக்கள்  மீது பா.ஜனாதாவின்  அழுத்தம் இருந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும்  இந்த பிரபலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்  என கோரப்பட்டது.

மராட்டிய  உள்துறை அமைச்சர்  அனில் தேஷ்முக் இதுகுறித்து  விசாரணை நடத்த புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். 

இந்த நிலையில் சச்சின், லதா மங்கேஷ்கர்விசாரிக்கப்படுவார்கள் என்று நான்  என்று ஒருபோதும் கூறவில்லை என  உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறி உள்ளார்.

இது குறித்து மராட்டிய  உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது:-

"எங்கள் கடவுளைப் போலவே லதா தீதியையும் (மங்கேஷ்கர்) நாங்கள் மதிக்கிறோம், சச்சின் நம் நாட்டில் உள்ள அனைவராலும் விரும்பப்படுகிறார். அவர்களுக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் டுவிட் வழங்கினார்களா என்பதைப் பார்க்க பாஜக ஐடி செல் விசாரிக்கப்படும் என்று தான் நான் அறிவித்தேன் .

மாநில புலனாய்வுத் துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பாஜக ஐடி விங் தலைவரின் பங்கு இருப்பதாகக் தெரியவந்து உள்ளது. மேலும் பிரபலங்களின் டுவீட்டுகளுக்குப் பின்னால் 12 செல்வாக்கு மிக்கவர்கள்  உள்ளனர் என  கூறினார்.

Next Story