திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 16 Feb 2021 10:22 PM GMT (Updated: 16 Feb 2021 10:22 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது. 

இதையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

மாசித்திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கோவில் நிர்வாகத்தின் மூலம் மாசித்திருவிழா நிகழ்ச்சிகளை காண வரும் மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். கோவிலுக்குள் தேவையான இடங்களில் பக்தர்கள் கை கழுவுவதற்கான வசதியும், சானிடைசர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரதவீதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story