விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு; மராட்டிய முதல்வர் எச்சரிக்கை


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 17 Feb 2021 1:57 AM GMT (Updated: 17 Feb 2021 1:57 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வீழ்ச்சி அடைந்து இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்தை தாண்டி தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது கடந்த ஒரு மாதத்தில் அதிகபட்ச பாதிப்பாக அமைந்தது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 663 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 7 நாட்களாக மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் சில மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரிக்கிறது.

விதிமுறைகள் தளர்வு மற்றும் மக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதது தான் மீண்டும் கொரோனா உயர்வுக்கு வழிவகுத்துள்ளது என கூறப்படுகிறது. தொற்று பாதிப்பு மீண்டும் தொடர்ந்து அதிகரித்து இருப்பது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை முதல்-மந்திரி அஜித்பவார், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே உடன் இருந்தனர்.

ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

மாநிலத்தில் படிப்படியாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சியம் கவலையளிக்கிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க போகிறீர்களா? அல்லது மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்கப்போகிறீர்களா? என்பதை தற்போது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை செய்யாவிட்டால் மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலைமை வரும்” என்றார்.


Next Story