மத்திய பிரதேசம்: பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு


மத்திய பிரதேசம்: பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 Feb 2021 7:34 AM GMT (Updated: 17 Feb 2021 8:07 AM GMT)

மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலம் சிதி பகுதியில் இருந்து சத்னா நகரை நோக்கி சுமார் 60 பயணிகளுடன் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பட்னா கிராமத்தின் அருகே பஸ் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய கால்வாய்க்குள் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

கால்வாய் தண்ணீரில் பஸ் மூழ்கியதால் பயணிகள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்ற அபாய குரல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் கால்வாயில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் தத்தளித்த 7 பேரை உயிருடன் மீட்டனர்.

பின்னர் அவர்களை தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 

இன்னும் 5- பேர் விபத்துக்கு பிறகு மாயமாகி இருப்பதாக நம்பப்படுவதால் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.  இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Next Story