பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளருக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


பாலியல் புகார்: பெண் பத்திரிகையாளருக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 17 Feb 2021 11:26 PM GMT (Updated: 17 Feb 2021 11:26 PM GMT)

பெண் பத்திரிகையாளருக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி தொடர்ந்த பாலியல் அவதூறு வழக்கை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார்.

புது டெல்லி,

மூத்த பத்திரிகையாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எம்.ஜே.அக்பர், தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பிரபல பெண் பத்திரிகையாளர் பிரியா ரமானி டுவிட்டரில் ‘மீ டு’ பிரசாரத்தின்போது புகார் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு ரவீந்திர குமார் பாண்டே நேற்று விசாரித்து தீர்ப்பு கூறினார்.

அப்போது மாஜிஸ்திரேட்டு, ‘தனக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல் தொடர்பான புகாரை எந்த ஒரு தளத்திலும் தெரிவிக்க பெண்களுக்கு உரிமை உண்டு. பெண்களுக்கு மரியாதை என்ற கருப்பொருளை கொண்டு எழுதப்பட்ட மகாபாரதம், ராமாயணம், பெரும் இதிகாசங்களை கொண்ட நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் வெட்கி தலைகுனிய வைக்கிறது. இந்திய பெண்களுக்கு சுதந்திரமும், சமத்துவமும், சமூகப் பாதுகாப்பும் கிடைக்கப் பெறும்போது எந்த ஒரு துறையிலும் சாதிக்கும் திறமை படைத்தவர் ஆகிறார்கள். இதன்படி, இந்த வழக்கில் கிரிமினல் அவதூறு குற்றம் சாட்டப்பட்ட பிரியா ரமானிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்’ என்று கூறினார். மேலும் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தார்.


Next Story