நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 100 பேர் பலி புதிதாக 11,610 பேருக்கு கொரோனா பாதிப்பு


நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 100 பேர் பலி புதிதாக 11,610 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2021 11:35 PM GMT (Updated: 17 Feb 2021 11:35 PM GMT)

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 100 பேர் கொரோனாவால் மரணித்தபோதும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு மரணமும் பதிவாகவில்லை.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 100 பேர் கொரோனாவால் மரணித்தபோதும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு மரணமும் பதிவாகவில்லை.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளும், மரணங்களும் கட்டுக்குள் வரத்தொடங்கி இருக்கின்றன. கேரளா, மராட்டியம் போன்ற ஒருசில மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் கொரோனாவை வென்று வருகின்றன.

நாடு முழுவதும் தற்போதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதிப்புகளும், சுமார் 100 பேர் வரையிலான மரணங்களும் தினந்தோறும் நிகழ்ந்தாலும், இவை அனைத்தும் ஒருசில மாநிலங்களிலேயே நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 100 பேர் கொரோனாவால் மரணித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 39 பேர், கேரளாவில் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆனால் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, காஷ்மீர், ஜார்கண்ட், புதுச்சேரி, இமாசலபிரதேசம், மணிப்பூர், லடாக், அசாம், சிக்கிம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்தவித கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை.

100 புதிய மரணங்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 913 ஆக உயர்ந்திருக்கிறது. எனினும் நாட்டின் மரண விகிதம் 1.43 ஆகவே நீடிக்கிறது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 11 ஆயிரத்து 610 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதன் மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320 ஆகியிருக்கிறது.

இதற்கிடையே நாட்டின் குணமடைதல் விகிதம் 97.33 சதவீதம் ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது மொத்த பாதிப்பில் 1 கோடியே 6 லட்சத்து 44 ஆயிரத்து 858 பேர் நேற்று காலை வரை மீண்டிருக்கிறார்கள்.

இதனால் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 1 லட்சத்து 36 ஆயிரத்து 549 ஆக சரிந்திருக்கிறது. அதாவது வெறும் 1.25 சதவீத நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று முன்தினமும் 6 லட்சத்து 44 ஆயிரத்து 931 சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியே 79 லட்சத்து 77 ஆயிரத்து 229 ஆக அதிகரித்து இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் வேகமாக அமல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் பயனாக நேற்று காலை 8 மணி வரை சுமார் 90 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

இதில் 61,50,922 சுகாதார பணியாளர்கள் (முதல் டோஸ்), 2,76,377 சுகாதார பணியாளர்கள் (இரண்டாவது டோஸ்) மற்றும் 25,71,931 முன்கள பணியாளர்கள் (முதல் டோஸ்) ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதில் 8 மாநிலங்கள் மொத்த தடுப்பூசி டோஸ்களில் 57.8 சதவீதத்தை பயன்படுத்தி இருக்கின்றன. உத்தரபிரதேசம் மட்டுமே 10.4 சதவீத டோஸ்களை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.


Next Story