ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ₹100-ஐ கடந்தது மத்திய பிரதேசத்தில் சதத்தை நெருங்கியது


ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ₹100-ஐ கடந்தது மத்திய பிரதேசத்தில் சதத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 18 Feb 2021 12:06 AM GMT (Updated: 18 Feb 2021 12:06 AM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹100-ஐ கடந்தது. மத்திய பிரதேசத்தில் ₹99.90 ஆக இருப்பதால் சதத்தை நெருங்கியது.

ஜெய்ப்பூர்,

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 25 பைசா நேற்று உயர்த்தப்பட்டது.

அதிலும் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹100-ஐ கடந்து, ₹100.13-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ₹2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹100-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசல் ஒரு லிட்டர் ₹93.16 க்கு விற்பனை செய்யப்பட்டது. கங்கா நகரில் ஒரு லிட்டர் உயர் ரக பெட்ரோல் ₹102.91-க்கும், டீசல் ₹95.79-க்கும் விற்பனையானது.

பெட்ரோல் லிட்டருக்கு 25 பைசா உயர்வால் டெல்லியில் லிட்டர் ₹89.54 ஆகவும், டீசல் ₹79.95 ஆகவும் விற்கப்பட்டது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ₹96-க்கும், டீசல் லிட்டர் ₹86.98-க்கும் விற்பனையானது.

மத்திய பிரதேச மாநிலம், அனுப்பூரில் பெட்ரோல் லிட்டர் ₹99.90-க்கும், டீசல் லிட்டர் ₹90.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கும் விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சதம் அடிக்க இருக்கிறது.

பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ₹32.90-ம், டீசல் மீது லிட்டருக்கு ₹31.80-ம் விதிக்கிறது. இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹19.95-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹17.66-ம் அதிகரித்துள்ளது. அதிலும், கடந்த 9-வது நாளாக தொடர்ந்து விலை உயர்த்தப்படுவதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹2.59-ம், டீசல் விலை ₹2.82-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story