வெடிகுண்டு வீச்சில் மந்திரி காயம்: முதல் மந்திரி மம்தா நேரில் ஆறுதல்


வெடிகுண்டு வீச்சில் மந்திரி காயம்:  முதல் மந்திரி மம்தா நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 18 Feb 2021 6:40 AM GMT (Updated: 18 Feb 2021 6:40 AM GMT)

மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு வீச்சில் மந்திரி காயமடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்கிறது.

முர்ஷிதாபாத்,

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் தொழிலாளர் துறை மந்திரியாக ஜாகிர் உசைன் இருந்து வருகிறார்.  அவர் கொல்கத்தா நகருக்கு செல்வதற்காக நிம்திதா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார்.  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த தாக்குதலுக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் மற்றும் மேற்கு வங்காளத்திற்கான மத்திய கண்காணிப்பாளரான கைலாஷ் விஜய்வர்க்கியா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மேற்கு வங்காளத்தில் நிம்திதா ரெயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் குணமடைந்து திரும்ப பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று விஜய்வர்க்கியா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மந்திரி ஜாகிர் உசைன் மீது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் நகரில் உள்ள நிம்திதா ரெயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.  அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.  கொல்கத்தாவில் உசைன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று அவருக்கு ஆறுதல் வழங்கினார்.  உடன் இருந்த மருத்துவர்களிடம் உசைனுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து உள்ளார்.

Next Story